டெல்லி சட்டசபை கூட்டம் வருகிற 24ந்தேதி நடைபெறும்; முதல் மந்திரி கெஜ்ரிவால்
டெல்லி சட்டசபை கூட்டம் வருகிற 24ந்தேதி நடைபெறும் என முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார்.
இதன்பின், தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 16ந்தேதி டெல்லி முதல் மந்திரியாக கெஜ்ரிவால் பதவியேற்று கொண்டார். அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். டெல்லி துணை முதல் மந்திரியாக மணீஷ் சிசோடியா பதவியேற்றுக்கொண்டார். அவர்களை தொடர்ந்து 6 பேர் மந்திரிகளாக பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடப்பட்டது. எனினும், உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் நடந்த பல்வேறு திட்ட தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி விழாவில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், உள்துறை மந்திரி அமித் ஷாவை அவரது இல்லத்தில் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி தொடர்புடைய பல்வேறு விசயங்களை விவாதித்தோம். டெல்லி வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றுவது என இருவரும் ஒப்பு கொண்டோம் என கூறினார்.
டெல்லி சட்டசபை கூட்டம் வருகிற 24ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்றும் முதல் மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story