எனது மகள் கூறியது தவறு : பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய அமுல்யாவின் தந்தை வருத்தம்


எனது மகள் கூறியது தவறு : பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய அமுல்யாவின் தந்தை வருத்தம்
x
தினத்தந்தி 21 Feb 2020 12:08 PM IST (Updated: 21 Feb 2020 12:08 PM IST)
t-max-icont-min-icon

’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என எனது மகள் கோஷம் இட்டது தவறு என்று அமுல்யாவின் தந்தை தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து குடியேறி இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை மத்திய அரசு கொண்டு வந்ததற்கு எதிராக நாட்டில் பல்வேறு இடங்களில் பேரணிகளும், போராட்டங்களும் நடந்து வருகின்றன.

அந்த வகையில், கர்நாடகாவின் பெங்களூரு நகரில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில்,  ஐதராபாத் எம்.பி  ஓவைசி கலந்து கொண்டார். 

இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட இளம்பெண் அமுல்யா மேடை ஏறி பேசும் போது,  'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என கோஷம் எழுப்பினார்.  அவரை தடுத்து நிறுத்திய ஓவைசி, இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தார். திடீரென பாகிஸ்தானுக்கு ஆதரவாக இளம்பெண் அமுல்யா கோஷம் எழுப்பியது மேடையில் சலசலப்பை ஏற்படுத்தியது. உடனடியாக மேடையில் இருந்து இளம்பெண் அப்புறப்படுத்தப்பட்டார். 

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய அமுல்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அமுல்யாவை 14 நாள் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அமுல்யாவின் தந்தை வருத்தம்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக  கோஷம் எழுப்பிய இளம்பெண் அமுல்யாவின் தந்தை தனது மகளின் செய்கைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்தப் பேட்டியில், "எனது மகள் அமுல்யா அப்படி பேசியது தவறு.  அவள் அண்மைக்காலமாக சில முஸ்லிம் அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளார். அவரை சில முஸ்லிம்கள் தவறாக வழிநடத்துகின்றனர். அவர் எனது பேச்சைக் கேட்பதே இல்லை" என்று கூறினார்.

Next Story