குஜராத் மாநிலத்தில் பெண் ஊழியர்களை நிர்வாணமாக நிறுத்தி மருத்துவ பரிசோதனை - புதிய சர்ச்சை


சூரத் நகராட்சி மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
x
சூரத் நகராட்சி மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
தினத்தந்தி 21 Feb 2020 12:17 PM GMT (Updated: 21 Feb 2020 7:42 PM GMT)

குஜராத் மாநிலத்தில் பெண் ஊழியர்களை நிர்வாணமாக நிறுத்தி மருத்துவ பரிசோதனை செய்திருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சூரத்,

குஜராத் மாநிலத்தில் பூஜ் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் மாதவிலக்கு நாட்களில் உணவு விடுதி உள்ளிட்ட குறிப்பிட்ட இடங்களுக்கு செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அங்கு கல்லூரி விடுதியில் சில தினங்களுக்கு முன் மாணவிகள் மாதவிலக்கு ஆகவில்லை என்பதை நிரூபிப்பதற்காக உள்ளாடைகளை கழற்றி காண்பிக்குமாறு கட்டாயப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சை உருவானது.

இந்த சர்ச்சை மறைவதற்குள் குஜராத்தில் இதுபோன்று மற்றொரு சம்பவம் நடந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அங்குள்ள சூரத் மாநகராட்சியின் பயிற்சி பெண் ஊழியர்கள் 10 பேருக்கு மாநகராட்சி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள மகளிர் வார்டில் நேற்று முன்தினம் மருத்துவ பரிசோதனை நடந்துள்ளது.

அப்போது அவர்களை நிர்வாணமாக நிற்க வைத்து பரிசோதனை செய்துள்ளனர்.

இது பற்றிய தகவல் வெளியே கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனருக்கு ஊழியர் சங்கம் புகார் செய்தது. அந்த புகாரில், திருமணம் ஆகாத பயிற்சி பெண் ஊழியர்களையும் அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா என பெண் மருத்துவர்களை கொண்டு பரிசோதித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுபற்றி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் அகமது ஷேக் கூறும்போது, “மருத்துவ பரிசோதனையின்போது பெண் ஊழியர்களிடம் கர்ப்பம் தொடர்பாக அபத்தமான கேள்விகளை பெண் மருத்துவர்கள் கேட்டு தர்ம சங்கடத்துக்கு ஆளாக்கி உள்ளனர். இப்படி அந்தரங்க கேள்விகள் கேட்பதை டாக்டர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். திருமணம் ஆகாதவர்களைக்கூட அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்களா இல்லையா என்பதை கண்டறிய உடல் பரிசோதனைக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். மருத்துவ பரிசோதனைகளின்போது பெண்களின் மரியாதை காக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் விதிகளின்படி கட்டாய மருத்துவ பரிசோதனையை செய்வதை எதிர்க்கவில்லை என்றும், பரிசோதனை நடத்துகிற விதத்தைத்தான் எதிர்ப்பதாகவும் ஊழியர்கள் சங்கம் கூறியது.

இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி மேயர் ஜெகதீஷ் படேல் உறுதி அளித்தார்.

இதுபற்றி அவர் குறிப்பிடும்போது, “இது மிகவும் தீவிரமான பிரச்சினை. பயிற்சி முடித்து, நிரந்தர ஊழியர்களாக நியமிக்கப்படுகிறபோதுதான் உடல்தகுதி மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும். இப்போது எழுந்துள்ள புகார் நிரூபிக்கப்பட்டால், சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

இதையடுத்து சூரத் மாநகராட்சி நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

நடந்ததாக கூறப்படுகிற சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு 3 உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில், மருத்துவ கல்லூரி முன்னாள் டீன் டாக்டர் கல்பனா தேசாய், மாநகராட்சி உதவி கமிஷனர் காயத்ரி ஜாரிவாலா, செயற்பொறியாளர் திருப்தி கலாதியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு 15 நாளில் தனது அறிக்கையை அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story