அயோத்தி அருகே மசூதி கட்ட ஒதுக்கிய நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றது


அயோத்தி அருகே மசூதி கட்ட ஒதுக்கிய நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றது
x
தினத்தந்தி 21 Feb 2020 10:45 PM GMT (Updated: 21 Feb 2020 8:04 PM GMT)

அயோத்தி அருகே மசூதி கட்ட உத்தரபிரதேச அரசு ஒதுக்கி கொடுத்த 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம் ஏற்றுக்கொண்டது.

லக்னோ,

அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்த நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில், கடந்த நவம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. அதே சமயத்தில், மசூதி கட்டுவதற்காக சன்னி வக்பு வாரியத்துக்கு அயோத்தியில் வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தருமாறு உத்தரவிட்டது.

அந்த நிலத்தை தேர்வு செய்யுமாறு உத்தரபிரதேச அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி, அயோத்தி மாவட்டம் சோஹாவல் தாலுகா தன்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை உத்தரபிரதேச அரசு ஒதுக்கி கொடுத்தது. இது, அயோத்தி மாவட்ட தலைநகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில், அயோத்தி- லக்னோ நெடுஞ்சாலையில் உள்ளது. அந்த நிலத்தை ஒதுக்கியதற்கான கடிதத்தை சன்னி வக்பு வாரியத்திடம் அளித்தது.

அதே சமயத்தில், அந்த நிலத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்று சன்னி வக்பு வாரியத்தை சில அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, அந்த 5 ஏக்கர் நிலத்தை ஏற்றுக்கொள்வதாக சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அதன் உறுப்பினர் பரூக்கி கூறியதாவது:-

கோர்ட்டு உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். அதனால்தான் நாங்கள் மறுஆய்வு மனு தாக்கல் செய்யவில்லை. எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.

வாரியத்துக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு தெளிவாக கூறியுள்ளது. அதில் மசூதி உள்ளிட்ட வசதிகள் கட்ட எங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், நிலத்தை நிராகரிக்கக்கூடிய உரிமை, சன்னி வக்பு வாரியத்துக்கு இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டு கூறவில்லை.

எனவே, நிலத்தை ஏற்றுக்கொள்வதை தவிர, எங்களுக்கு வேறு வழி இல்லை. இல்லாவிட்டால், அது கோர்ட்டு அவமதிப்பாகி விடும்.

இருப்பினும், அந்த நிலத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து 24-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்கும் வாரிய கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Next Story