சிறந்த மொழிபெயர்ப்பு: தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது


சிறந்த மொழிபெயர்ப்பு: தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது
x
தினத்தந்தி 25 Feb 2020 9:00 PM GMT (Updated: 25 Feb 2020 9:00 PM GMT)

சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் முக்கிய 24 மொழிகளில் வெளியாகும் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு ஆண்டுதோறும் சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 23 மொழிகளுக்கான மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. கன்னட மொழிக்கு மட்டும் விருது அறிவிக்கப்படவில்லை.

மலையாள எழுத்தாளர் மனோஜ் குரூரின் ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ என்ற நாவலை கே.வி.ஜெயஸ்ரீ தமிழில் மொழி பெயர்த்தார். இந்த நாவல் மொழிபெயர்ப்புக்காக தமிழ் எழுத்தாளர் கே.வி.ஜெயஸ்ரீக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் ரொக்கம், செம்பு பட்டயமும் விருதாக அவருக்கு அளிக்கப்படும்.

சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள கே.வி.ஜெயஸ்ரீ திருவண்ணாமலையில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் படித்தது, வளர்ந்தது எல்லாம் தமிழகத்தில்தான். அரசியல் விமர்சகரும், மொழி பெயர்ப்பாளரும், எழுத்தாளருமான உத்திரகுமாரை திருமணம் செய்து கொண்டார். ஜெயஸ்ரீயின் மகள் சுகானா. இவரும் எழுத்தாளராக, மொழிப்பெயர்ப்பாளராக உள்ளார்.

இதுவரை நான்கு பெண் படைப்பாளிகள் தான் தமிழகத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்கள். அதில் ஜெயஸ்ரீயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து கே.வி.ஜெயஸ்ரீக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழில் கே.வி.ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த நாவல், மலையாளத்தில் வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பல பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் இடம் பெற்றிருக்கும் இந்த மலையாள நாவலை தமிழில் சிறந்த முறையில் மொழிபெயர்த்திருப்பது பெருமைக்குரியது. சாகித்ய அகாடமி விருது பெற உள்ள அவருக்கு பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இதேபோல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் ஆகியோரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


Next Story