விமான நிலையங்கள் அருகில் கொரோனா சிகிச்சை மையம்; நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்


விமான நிலையங்கள் அருகில் கொரோனா சிகிச்சை மையம்; நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 March 2020 11:15 PM GMT (Updated: 5 March 2020 11:15 PM GMT)

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருவது குறித்தும், அதற்காக எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் பேசினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில், தி.மு.க. மக்களவை குழு துணைத்தலைவர் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-

கடந்த ஜனவரி மாதமே கொரோனா குறித்த எச்சரிக்கை விடப்பட்டது எனவும், பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய மந்திரி குறிப்பிட்டுள்ளார். இதற்காக அவரை பாராட்டுகிறோம். இந்தியாவிலேயே புனேயில் இருக்கும் தேசிய வைராலஜி ஆய்வு நிலையம் ஒன்று மட்டுமே உள்ளது. இது போதாது. கொரோனா போன்ற கொடிய வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்ய நாட்டில் மண்டலத்துக்கு ஒரு வைராலஜி ஆய்வு நிலையமாவது அமைக்கப்பட வேண்டும்.

விமான நிலையங்களில் கொரோனா தாக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களுக்கு நகர்ப்புறத்துக்குள் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கிறார்கள். இந்த வைரஸ் வேகமாக பரவுகிற நிலையில் விமான நிலையங்களுக்கு அருகிலேயே தனிமைப்படுத்தப்பட்ட பாதுகாப்பான சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்பதை அறியும் தெர்மல் சோதனை அனைத்து விமான நிலையங்களிலும் இன்னும் செய்யப்படவில்லை.

வெளிநாட்டில் இருந்து வருகிறவர்களை வரவேற்க நான் விமான நிலையம் சென்றிருந்தபோது, அவர்களுக்கு தெர்மல் ஸ்க்ரீனிங் உள்பட பல்வேறு சோதனைகள் செய்யப்படவே இல்லை. நாட்டில் முக கசவங்கள் போதுமான அளவு இல்லை. இதுகுறித்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story