மத்தியபிரதேசத்தில் 17 காங். எம்.எல்.ஏ.க்களுடன் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மாயம்: கமல்நாத் அரசுக்கு மீண்டும் நெருக்கடி?


மத்தியபிரதேசத்தில் 17 காங். எம்.எல்.ஏ.க்களுடன் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மாயம்: கமல்நாத் அரசுக்கு மீண்டும் நெருக்கடி?
x
தினத்தந்தி 10 March 2020 4:00 AM IST (Updated: 10 March 2020 3:01 AM IST)
t-max-icont-min-icon

மத்தியபிரதேசத்தில் ஜோதிர்ஆதித்ய சிந்தியா மற்றும் அவருக்கு ஆதரவான 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை காணவில்லை. அதனால் கமல்நாத் அரசுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

போபால்,

மத்தியபிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாததால், சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி நடந்து வருகிறது.

அங்கு 3 மாநிலங்களவை காலியிடங்களுக்கு 26-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

இந்த நேரத்தில், கடந்த வாரம் 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடத்தப்பட்டதாக பேசப்பட்டது. ஆட்சியை கவிழ்ப்பதற்காக, அவர்களை கடத்தி, அரியானா மாநிலத்தில் ஒரு ஓட்டலில் அடைத்து வைத்துள்ளதாக பா.ஜனதா மீது காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஆனால், பா.ஜனதா இதை மறுத்தது. பின்னர், 8 எம்.எல்.ஏ.க்களும் திரும்பி வந்து, கமல்நாத் அரசுக்கு ஆதரவை தெரிவித்ததால், இப்பிரச்சினை அடங்கியது.

இந்நிலையில், நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜோதிர்ஆதித்யா சிந்தியாவையும், அவருடைய ஆதரவாளர்களாக கருதப்படும் 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களையும் காணவில்லை. சிந்தியாவின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது, அவர் போனை எடுக்கவில்லை. இதுபோல், 17 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே இருந்தனர்.

இவர்களில், சிந்தியாவின் ஆதரவாளர்களாக கருதப்படும் 6 மந்திரிகளும் அடக்கம். அவர்களின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. 17 பேரும் பெங்களூருக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட்டு, ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

தற்போது, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் முதல்- மந்திரி கமல்நாத்தே நீடித்து வருகிறார். மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்ற ஜோதிர் ஆதித்ய சிந்தியா காய் நகர்த்தி வருகிறார். இதுதொடர்பாக அவருக்கும், கமல்நாத்துக்கும் இடையே மோதல் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த பின்னணியில், சிந்தியாவும், அவருடைய ஆதரவு எம்.எல்.ஏ.க் களும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து கேட்டபோது, காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஒருவர், “கவலைப்பட ஒன்றும் இல்லை” என்று பதில் அளித்தார்.

இதற்கிடையே, கட்சி மேலிடத்துடன் ஆலோசனை நடத்த டெல்லி சென்றிருந்த முதல்-மந்திரி கமல்நாத், இந்த பிரச்சினையை தொடர்ந்து, தனது பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு போபாலுக்கு திரும்பினார்.

232 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில், தற்போது 2 இடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜனதாவுக்கு 107 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். 4 சுயேச்சைகளும், 2 பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்களும், ஒரு சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. வும் உள்ளனர்.


Next Story