இந்தியாவில் தயாராகும் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் முதல் பறக்கும் கார்


இந்தியாவில் தயாராகும் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் முதல் பறக்கும் கார்
x
தினத்தந்தி 10 March 2020 1:22 PM GMT (Updated: 10 March 2020 1:22 PM GMT)

உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் முதல் பறக்கும் கார் குஜராத்தில் உருவாக உள்ளது.

காந்திநகர்,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஊக்கம் அளித்து வருகிறது.  இதன்படி, முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் பறக்கும் கார் அமைப்பதற்கான தொழிற்சாலை இந்தியாவில் நிறுவப்பட உள்ளது.  நெதர்லாந்து நாட்டை சேர்ந்த பி.ஏ.எல்.-வி. என்ற பறக்கும் கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் இதற்கான தயாரிப்பு ஆலையை அமைக்க உள்ளது.

குஜராத் முதன்மை செயலாளர் எம்.கே. தாஸ் மற்றும் பி.ஏ.எல்.-வி. நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக வளர்ச்சி பிரிவின் துணை தலைவர் கார்லோ மாஸ்பொம்மல் ஆகியோர் முன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

வரும் 2021ம் ஆண்டில் இருந்து உற்பத்தியை தொடங்குவதற்கு நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.  இதுபற்றி அந்நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஆலையை நிறுவ தேவையான அனைத்து ஒப்புதல்களையும் பெறுவதற்கு குஜராத் அரசு உதவும் என தெரிவித்து உள்ளது.

உலக தரத்திலான சிறந்த உட்கட்டமைப்பு மற்றும் வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற சாதக சூழ்நிலை ஆகியவை கொண்டுள்ளதற்காக குஜராத் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.  இதனுடன், சிறந்த வர்த்தக துறைமுகங்கள் மற்றும் தளவாட வசதிகள் ஆகியவற்றை குஜராத் அரசு வழங்க முன்வந்துள்ளது.

இதனால் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களை ஐக்கிய நாடுகள் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு நிறுவனத்திற்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.

இந்நிறுவனம் 110 பறக்கும் கார்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டர்களை முன்பே பெற்று விட்டது.

இந்த காரில் இரண்டு என்ஜின்கள் இருக்கும்.  சாலையில் மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்திலும் மற்றும் பறக்கும்பொழுது மணிக்கு 180 கி.மீட்டர் வேகத்திலும் செல்லும் திறன் கொண்டிருக்கும்.  இந்த காரானது 3 நிமிடங்களில் பறக்கும் நிலைக்கு மாறும் திறன் பெற்றது.  ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 500 கி.மீட்டர் தொலைவை சென்றடைய கூடிய திறனும் பெற்றிருக்கும்.

Next Story