இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 61 ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
x
தினத்தந்தி 10 March 2020 11:00 PM GMT (Updated: 2020-03-11T02:50:02+05:30)

இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தற்போது 61 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் 47 ஆக இருந்தது.

இந்நிலையில், நேற்று கேரளாவில் மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 6 பேர், இத்தாலிக்கு சென்று திரும்பி கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் உறவினர்கள் ஆவர். மீதி 2 பேர், பாதிக்கப்பட்ட 3 வயது ஆண் குழந்தையின் பெற்றோர் ஆவர்.

இதுபோல், கர்நாடகாவில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய சாப்ட்வேர் என்ஜினீயர் ஏற்கனவே பாதிக்கப்பட்டு இருந்தார். அவருடைய மனைவி, மகள் ஆகியோருக்கும், அமெரிக்காவில் இருந்து லண்டன் வழியாக பெங்களூருவுக்கு வந்த ஒருவருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

மராட்டிய மாநிலம் புனேவில் மேலும் 3 பேரை கெரோனா வைரஸ் தாக்கியது. அவர்களில் 2 பேர், ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள். மற்றொருவர், அவர்கள் பயணம் செய்த வாடகை காரின் டிரைவர் ஆவார்.

இதைத்தொடர்ந்து, இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது.

Next Story