மாட்டிறைச்சி, மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்க திட்டமா? - மத்திய அரசு பதில்


மாட்டிறைச்சி, மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்க திட்டமா? - மத்திய அரசு பதில்
x
தினத்தந்தி 13 March 2020 10:53 PM GMT (Updated: 13 March 2020 10:53 PM GMT)

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, மாட்டிறைச்சி, மீன் ஏற்றுமதிக்கு தடை விதிக்கும் திட்டம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது.

புதுடெல்லி,

ஏற்றுமதி

அதற்கு மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை இணை மந்திரி சஞ்சீவ் குமார் பல்யான் பதில் அளித்தார். அவர் கூறுகையில், “இந்தியா ரூ.70 ஆயிரம் கோடிக்கு மாட்டிறைச்சி, மீன் ஏற்றுமதி செய்கிறது. மாட்டிறைச்சி, மீன் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதை தடை செய்யும் திட்டம் இல்லை. கோசாலைகளை பராமரிப்பது மாநில அரசுகளின் அதிகாரத்துக்கு உட்பட்டது. அதற்கு கால்நடை பராமரிப்பு வாரியம் நிதி ஒதுக்க முடியாது” என்றார்.

வரி வழக்கு தீர்வு மசோதா

வரி தொடர்பான வழக்குகளை கோர்ட்டுகளிலும், தீர்ப்பாயங்களிலும் சந்தித்து வருபவர்களின் நிவாரணத்துக்காக, ‘விவாத் சே விஷ்வாஸ்’ என்ற மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. கடந்த 4-ந்தேதி, மக்களவையில் இம்மசோதா நிறைவேறியது.

இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

வழக்குகளை சந்திப்பவர்கள், உரிய வரியை மார்ச் 31-ந்தேதிக்குள் செலுத்தினால், வட்டி, அபராதம் ஆகியவற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள இந்த சட்டம் வகை செய்கிறது. தற்போது, ரூ.9 லட்சத்து 32 ஆயிரம் கோடி மதிப்புள்ள வரி சம்பந்தப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

டாக்டர்கள் பற்றாக்குறை இல்லை

மத்திய அரசின் சுகாதார திட்டங்களில் டாக்டர்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் மக்களவையில் கேள்வி நேரத்தின்போது தெரிவித்தார்.

இத்திட்டம், நாடு முழுவதும் 72 நகரங்களில் செயல்படுவதாக அவர் கூறினார்.

நூறு நாள் வேலை திட்ட செலவு

நூறு நாள் வேலைவாய்ப்பு அளிக்கும் ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தின்’ கீழ், 2017-2018 முதல் 2019-2020 நிதி ஆண்டுவரை ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய வேளாண்துறை இணை மந்திரி புருஷோத்தம் ருபாலா மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது கூறினார்.

இத்தொகை, 6 ஆண்டுகளுக்கு முன்பு செலவிட்டதை போல் 2 மடங்கு ஆகும் என்றும் அவர் கூறினார்.

இலவச முக கவசம் தேவை

கொரோனா வைரசில் இருந்து பாதுகாக்க அணியும் முக கவசங்களின் விலை அதிகரித்து விட்டதால், பொதுமக்களுக்கு மத்திய அரசே முக கவசங்களை இலவசமாக வினியோகிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் பினோய் விஸ்வம் கேட்டுக்கொண்டார்.

அவரது கோரிக்கைக்கு ஆதரவாக பல உறுப்பினர்கள் பேசினர்.

ரெயில்வேயை சீர்திருத்தம் செய்வதற்கு பதிலாக, அதை மத்திய அரசு சிதைத்து வருவதாக மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டினார்.


Next Story