“எனக்கு விவாகரத்து வாங்கி தந்து விட்டு என் கணவரை தூக்கில் போடுங்கள்” - நிர்பயா கொலை குற்றவாளியின் மனைவி கோர்ட்டில் மனு


“எனக்கு விவாகரத்து வாங்கி தந்து விட்டு என் கணவரை தூக்கில் போடுங்கள்” - நிர்பயா கொலை குற்றவாளியின் மனைவி கோர்ட்டில் மனு
x
தினத்தந்தி 18 March 2020 11:22 AM GMT (Updated: 18 March 2020 9:06 PM GMT)

எனக்கு விவாகரத்து வாங்கி தந்து விட்டு என் கணவரை தூக்கில் போடுங்கள் என்று, நிர்பயா கொலை குற்றவாளி அக்‌ஷய் குமார் சிங்கின் மனைவி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

புதுடெல்லி,

“விதவையாக வாழ எனக்கு விருப்பம் இல்லை, எனவே, எனக்கு விவாகரத்து வாங்கி தந்து விட்டு என் கணவரை தூக்கில் போடுங்கள்” என்று, நிர்பயா கொலை குற்றவாளி அக்‌ஷய் குமார் சிங்கின் மனைவி கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

டெல்லியில், ஓடும் பஸ்சில் துணை மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் சிங் (வயது 32), அக்‌ஷய்குமார் சிங் (31), வினய் சர்மா (26), மற்றும் பவன்குப்தா (25) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் மறு ஆய்வுமனு, சீராய்வு மனு, ஜனாதிபதிக்கு கருணை மனு என அவர்கள் மாறி மாறி சட்ட வாய்ப்புகளை பயன்படுத்தியதன் காரணமாக 3 முறை அவர்களது தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.

கோர்ட்டு பிறப்பித்த 4-வது மரண உத்தரவின்படி 4 பேரையும் டெல்லி திகார் சிறையில் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை சிறை நிர்வாகம் செய்து வருகிறது.

இதற்கிடையே, குற்றவாளிகள் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்துக்கு மனு அனுப்பப்பட்டது. முகேஷ்குமார் சிங்கின் தாயார், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல், குற்றம் நடைபெற்ற 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி தான் டெல்லியில் இல்லை என்று முகேஷ்குமார் சிங் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய்குமார் சிங்கின் மனைவி புனிதா, புதிதாக ஒரு மனுவை பீகார் மாநிலம் அவுரங்காபாத் கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளார்.

அந்த மனுவில், “20-ந் தேதி என் கணவர் தூக்கிலிடப்பட உள்ளார். அவர் இறந்து, அதன் காரணமாக நான் விதவையாக விரும்பவில்லை. எனவே, அவரை தூக்கில் போடுவதற்கு முன்பு எனக்கு விவாகரத்து வாங்கிக் கொடுங்கள்” என்று கோரப்பட்டு உள்ளது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி, வழக்கை இன்றைய தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்திவைத்தார்.


Next Story