120 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து


120 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து
x
தினத்தந்தி 19 March 2020 4:26 PM GMT (Updated: 2020-03-19T21:56:57+05:30)

கொரோனா பாதிப்பு எதிரொலியால் திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருப்பதி,

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. 4 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது.

கொரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  கோவில்களுக்கும் மக்கள் வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில்,  உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் வருவதைத் தவிர்க்க வேண்டும் என தேவஸ்தானம் கேட்டுக் கொண்டது. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகக் கணிசமாகக் குறைந்தது. 

இந்த சூழலில் ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலை மூட நிர்வாகம் முடிவு செய்தது.  அதுமட்டுமல்லாமல் திருப்பதி கோவிலுக்கு இன்று வந்த மராட்டிய மாநில பக்தர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்ததையடுத்து, கோவிலை மூடுவது என தேவஸ்தானம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. 

இதனையடுத்து கொரோனா பாதிப்பு எதிரொலியால்   திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுவாமிக்கு பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  7 நாட்களுக்கு பிறகு நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து ஆந்திரப் பிரதேச சுகாதாரத்துறை மந்திரி அலா நானி கூறுகையில், 

திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து முக்கியக் கோவில்களும் வரும் 31-ம் தேதி வரை மூடப்படும். அலிபிரியில் இருந்து திருமலை செல்லும் இரு மலைப்பாதைகளும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதையும் மூடப்பட்டு பக்தர்கள் வருகை நிறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் யாரும் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேசமயம், கோவிலில் சுவாமிக்கு தினமும் நடைபெறும் அனைத்து ஆராதனைகள், பூஜைகள், வழக்கம் போல் நடைபெறும்.  

இவ்வாறு அவர் கூறினார். 

இதேபோன்று கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள், திருச்சானூர் பத்மாவதி தாயார், கோதண்டராமர் கோவில்களிலும் தரிசனம் நிறுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவில் 120 ஆண்டுகளுக்கு பிறகு  பக்தர்களின் வருகை நிறுத்தப்பட்டுள்ளது.  1892-ம் ஆண்டு, 2 நாட்கள் கோவில் மூடி இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றது. 

Next Story