மும்பை தாராவி பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு


மும்பை தாராவி பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 2 April 2020 12:47 PM IST (Updated: 2 April 2020 12:47 PM IST)
t-max-icont-min-icon

மும்பை தாராவி பகுதியில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

மும்பை,

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1965 ஆக உள்ளது.  இந்தியாவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மராட்டிய மாநிலம் முதல் இடம் வகிக்கிறது. மராட்டியத்தில், 335 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மராட்டிய மாநிலத்தில், ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசைப்பகுதியாக உள்ள தாராவி பகுதியில் கொரோனா பரவியுள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று தாராவி பகுதியை சேர்ந்த 56-வயதான ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து,  அவர் வசித்த கட்டிடம் சீல் வைக்கப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 

இந்த நிலையில், மும்பை தாராவி பகுதியை சேர்ந்த 52-வயது தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வோர்லி பகுதியில் வசித்து வரும் அந்த தூய்மை பணியாளர், தாராவி பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டு வந்தார். வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்ததும், உடனடியாக தூய்மை பணியாளரை தனிமைப்படுத்திய மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். 

600 ஏக்கர் பரப்பளவு உள்ள தாராவியில் 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள் நெருக்கம் மிகவும் அதிகமாக உள்ள தாராவியில்  இருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது பொதுமக்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story