பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? - மத்திய அரசு விளக்கம்
ஏப்ரல் 14-ந் தேதிக்கு பிறகு, நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா? என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த மாதம் 24-ந் தேதி நள்ளிரவில் இருந்து ஊரடங்கு அமலுக்கு வந்ததால், பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
தற்போது, ஆன்லைன் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 21 நாள் ஊரடங்கு, வருகிற 14-ந் தேதி முடிவடைகிறது. ஊரடங்கை நீட்டிக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியுள்ளது.
எனவே, 14-ந் தேதிக்கு பிறகு, பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசு நேற்று விளக்கம் அளித்தது.
இதுபற்றி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கூறியதாவது:-
இந்தியாவில், 34 கோடி மாணவர்கள் உள்ளனர். இது, அமெரிக்க மக்கள்தொகையை விட அதிகம். அவர்கள் எங்களின் மிகப்பெரிய சொத்து.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பு, மத்திய அரசுக்கு மிகவும் முக்கியம். 14-ந் தேதிக்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது.
14-ந் தேதியன்று, அப்போதைய கொரோனா நிலவரத்தை ஆய்வு செய்வோம். பள்ளி, கல்லூரிகளை மீண்டும் திறப்பதா அல்லது மேலும் சில நாட்களுக்கு மூடுவதா என்பது குறித்து 14-ந் தேதி முடிவு செய்யப்படும்.
ஒருவேளை, 14-ந் தேதிக்கு பிறகும் பள்ளி, கல்லூரிகளை தொடர்ந்து மூடுவதாக இருந்தால், மாணவர்களின் கல்வியாண்டில் இழப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய முயன்று வருகிறோம். ஏற்கனவே ஆன்லைனில் பாடங் கள் நடத்தப்படுகின்றன.
பள்ளி, கல்லூரிகள் பின்பற்றி வரும் செயல் திட்டத்தை எனது அமைச்சகம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. நிலைமை சீரடைந்து, ஊரடங்கு விலக்கப்பட்டவுடன், நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்துவது, விடைத்தாள்கள் திருத்துவது ஆகிய பணிகளுக்கான திட்டம் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story