ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படும் கொரோனா சிகிச்சைக்கு புதிய டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் - மத்திய அரசு திடீர் முடிவு


ஆன்லைனில் பயிற்சி அளிக்கப்படும் கொரோனா சிகிச்சைக்கு புதிய டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள் - மத்திய அரசு திடீர் முடிவு
x
தினத்தந்தி 9 April 2020 5:12 AM IST (Updated: 9 April 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் சிகிச்சையில் புதிய டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர் களை ஈடுபடுத்தவும், அவர்களுக்கு ஆன் லைனில் பயிற்சி அளிக்கவும் மத்திய அரசு திடீர் முடிவு எடுத்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக, பொதுமக்களை வீடுகளுக்குள் முடக்க வகை செய்து 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த ஊரடங்கு காலத்திலும் கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை.

நமது நாட்டில் 5,200-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இன்னும் அச்சுறுத்தல் தொடர்கிறது என்பதையே இது காட்டுகிறது.

கொரோனா சிகிச்சையில் முன் வரிசையில் நின்று பணியாற்றி வருகிற டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர் கள் உள்ளிட்டோரின் சேவை பெரிதும் பாராட்டப்படுகிறது. அதே நேரத்தில் தொடர்ந்து அவர்கள் பணியில் ஈடுபட்டு வந்தால் அவர்களுக்கு பணிச்சோர்வு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே இந்த முன்வரிசை பணியாளர்களை மாற்றுவதற்கு வசதியாக ஒரு புதிய படையை உருவாக்க மத்திய அரசு திடீரென முடிவு எடுத்துள்ளது. அவர்களுக்கு தேவையான பயிற்சியை ஆன்லைனில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மத்திய பணியாளர் நலன் துறை விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா தொற்று நோயைப் பொறுத்தமட்டில் நமது நாட்டில் மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதை அனைவரும் அறிவோம். கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கான சிகிச்சையில் முன் வரிசையில் நின்று பணியாற்றுகிற அனைவரும் பாராட்டத்தக்க விதத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.

இருப்பினும் அவர்களை மாற்றுவதற்கும், இனிவரும் அடுத்தடுத்த கட்டங்களை சமாளிக்க வசதியாகவும் ஒரு பெரிய படையை உருவாக்க வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.

அந்த வகையில் முன் வரிசை பணியாளர்களின் பயிற்சி தேவையை கவனித்துக் கொள்வதற்கு, ஒருங்கிணைந்த அரசு ஆன்லைன் பயிற்சிதளம் வேகமாக தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சி தளமானது வசதியான நேரத்தில், தள அடிப்படையில், பயிற்சி தொகுதிகளை வழங்கும். எனவே கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதித்தவர்களை கவனிக்கத் தக்க அளவுக்கு அவர்கள் தயாராகி விட முடியும்.

இந்த பயிற்சியானது டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள், சுகாதாரப்பணியாளர்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள், துணை நர்சிங் மருத்துவச்சிகள் மற்றும் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கானது ஆகும்.

இந்த ஆன்லைன் பயிற்சியானது, பல்வேறு போலீஸ் அமைப் புகள், தேசிய மாணவர் படை, நேரு யுவகேந்திர சந்கேதன், தேசிய சேவை திட்டம் (என்எஸ்எஸ்), இந்திய செஞ்சிலுவை சங்கம், சாரணர்கள், பி.எஸ்.ஜி. வழிகாட்டிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கும் உரியது ஆகும். இந்த பயிற்சியை எடுத்துக்கொள்ளுமாறு அனைத்து தரப்பினரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று நோயை திறமையாக கையாள முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story