கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை இந்தியாவில் 7 ஆயிரத்தை நோக்கி நகர்கிறது - பலி 200-ஐ கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நோக்கி நகர்கிறது. பலி 200-ஐ கடந்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கடந்த வாரம் தொடங்கி கொரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கி உள்ளது. பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது. குறிப்பாக மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி, ராஜஸ்தான், தெலுங் கானா, ஆந்திரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகமாக உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரம், இந்தியாவில் மொத்தம் 6,412 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பதாக காட்டுகிறது. நேற்றுமுன்தினம் தொடங்கி நேற்று வரையிலும் 30 பேர் பலியானதாக கூறுகிறது. இதுவரை பலியானோர் எண்ணிக்கை 199 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநிலங்கள் தெரிவித்துள்ள புள்ளிவிவரம் மாறுபடுகிறது.
இதன்படி பார்த்தால், கொரோனா பாதிப்புக்குள்ளா னோரின் எண்ணிக்கை நேற்று மாலை நிலவரப்படி 6,761 ஆக உள்ளது. 7 ஆயிரத்தை நோக்கி செல்வதையே இது காட்டுகிறது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 200-ஐ கடந்து 206 ஆக உள்ளது.
நேற்று ஒரே நாளில் 678 பேருக்கு கொரோனா தாக்கியது. 24 மணி நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை, 37 ஆகும். மராட்டியம் தொடர்ந்து முதல் இடம் வகிக்கிறது. அங்கு இந்த நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை 1,364 ஆகும். பலியானவர்களின் எண்ணிக்கை 97 ஆக இருக்கிறது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் புதிதாக 77 பேருக்கு நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 9 ஆகவும், குணம் அடைந்தோர் எண்ணிக்கை 44 ஆகவும் உள்ளது. டெல்லியில் இந்த வைரஸ் 898 பேரை தாக்கி இருக்கிறது. 13 பேரை உயிரிழக்க வைத்துள்ளது.
டெல்லியில் 20 இடங்களும், உத்தரபிரதேச மாநிலத்தில் 100 இடங்களும் தீவிரமாக பரவுகிற இடங்களாக கண்டறியப்பட்டு, அந்த இடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
‘சீல்’ வைக்கப்பட்டுள்ள இடங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அனுமதி இல்லை, அவர்களுக்கு வீட்டு வாசலுக்கு சென்று, அத்தியாவசிய பொருட்கள் வினியோகிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.
பல்வேறு இடங்களில் சிக்கியுள்ள இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 14.3 லட்சம் பேருக்கு, 37 ஆயிரத்து 978 இடங்களில் தங்க இட வசதியும், நிவாரணமும் செய்து தரப்பட்டுள்ளது, 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு முகாம்கள் மூலம் 1 கோடிக்கும் அதிகமானோருக்கு உணவு தரப்படுவதாக உள்துறை இணைச்செயலாளர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story