ஒடிசாவில் அதிரடி முக கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது


ஒடிசாவில் அதிரடி முக கவசம் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது
x
தினத்தந்தி 11 April 2020 4:38 AM IST (Updated: 11 April 2020 4:38 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் முக கவசம் அணிந்து வருபவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வர், 

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 14-ந்தேதியுடன் முடிவுக்கு வர இருக்கும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக, அம்மாநில முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்தார். மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

அரசின் இந்த உத்தரவை அமல்படுத்தும் வகையில் அங்குள்ள பெட்ரோல் நிலையங்கள் “முக கவசம் இல்லையேல், பெட்ரோல் இல்லை” என்ற விதிமுறையை கொண்டுவந்துள்ளன. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 1,600 பெட்ரோல் நிலையங்களிலும் முக கவசம் அணிந்து வருபவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மளிகை மற்றும் காய்கறி கடை உரிமையாளர்களும் முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.

Next Story