ஊரடங்கை நீட்டிக்க வேண்டும்: பல்வேறு மாநில முதல்வர்கள் பிரதமரிடம் வலியுறுத்தியதாக தகவல்
கொரோனா வைரசின் பரவலின் வேகம் குறையாததால், ஊரடங்கை மேலும், நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில முதல் மந்திரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
புதுடெல்லி,
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், அதை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடந்த மாதம் 24-ந் தேதி இரவு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போது பிரதமர் மோடி இதை அறிவித்தார். ஊரடங்கு நடவடிக்கையை தொடங்கும் முன் மார்ச் 20-ந் தேதி மாநில முதல்-மந்திரிகளுடன் அவர் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு கடந்த 2-ந் தேதியும் அவர் முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவே கவுடா உள்ளிட்ட தலைவர்களுடனும் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ந் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்து பணிகளும் முடங்கி உள்ளன. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 18 நாட்கள் ஆகிவிட்டன, என்றாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது.
இது தொடர்பாக கடந்த 8-ந்தேதி பிரதமர் மோடி நாடாளுமன்ற கட்சி தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திய போது, அவர்களில் பெரும்பாலானவர்கள் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்தனர். அப்போது அவர்களிடம், நாட்டில் சமூக நெருக்கடி நிலை போன்ற ஒரு சூழ்நிலை உருவாகி இருப்பதாகவும், ஒவ்வொருவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதால் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் மோடி கூறினார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி காலை காணொலி காட்சி மூலம் மாநில முதல்-மந்திரிகளுடன் மீண்டும் பேசினார். இந்தக் கூட்டத்தில் பேசிய டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ”நாடு முழுவதும் ஊரடங்கை வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும். ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பான முடிவு தேசிய அளவில் எடுக்க வேண்டும்.ஊரடங்கின் கால நிர்ணயம் குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்தால், கொரோனாவுக்கு எதிரான போர் தீர்க்கமானதாக இருக்காது. ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அனைத்து வகையான போக்குவரத்துக்கும் தொடர்ந்து தடை விதிக்க வேண்டும்” என்றார். பல்வேறு மாநில முதல் மந்திரிகளும் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன.
Related Tags :
Next Story