இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 414 ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 414 ஆக உயர்வு
x
தினத்தந்தி 16 April 2020 3:49 AM GMT (Updated: 16 April 2020 3:49 AM GMT)

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 414 ஆக இன்று உயர்ந்து உள்ளது.

புதுடெல்லி,

உலக நாடுகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது.  இதனை முன்னிட்டு கடந்த மார்ச் 24ந்தேதியில் இருந்து அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இதனை அடுத்து கடந்த 14ந்தேதி அடுத்த 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதனால் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா பரவல் பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.  தொடர்ந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்படி மக்களிடம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவில், நேற்று 1,076 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.  38 பேர் பலியாகி இருந்தனர்.  இதனால் கொரோனாவுக்கு பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 439 ஆக உயர்ந்து இருந்தது.  இவர்களில் 9,756 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

1,306 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.  இந்தியாவில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை 377 ஆக உயர்ந்தது.  இதுவரை இல்லாத வகையில் நேற்றைய மொத்த பாதிப்பில் 10 சதவீதத்திற்கும் கூடுதலாக, ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,380 ஆக இன்று உயர்ந்து உள்ளது.  பலி எண்ணிக்கை 414 ஆக உயர்ந்து உள்ளது.  10,477 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  1,489 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story