பயணிகளுக்கு முழுக்கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும்: விமான போக்குவரத்து இயக்குநரகம்


பயணிகளுக்கு முழுக்கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும்:  விமான போக்குவரத்து இயக்குநரகம்
x
தினத்தந்தி 16 April 2020 1:17 PM GMT (Updated: 2020-04-16T18:58:33+05:30)

பயணிகளுக்கு முழுக்கட்டணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால்,  கடந்த மாதம் 25 ஆம் தேதி நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், கொரோனா கட்டுக்குள் வராததால்,  மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கால், விமான போக்குவரத்தும் முடங்கியது. உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.  விமானங்கள் ரத்தால், முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டிய நிலை விமான நிறுவனங்களுக்கு ஏற்பட்டது.  

ஆனால், விமான முன்பதிவுக் கட்டணம் திருப்பி அளிக்கப்படாது என்று அறிவித்த விமான நிறுவனங்கள், ஒரு ஆண்டுக்குள், ஏற்கனவே முன்பதிவு செய்த டிக்கெட் கட்டணத்தை பயன்படுத்தி பயணிகள் பயணித்துக்கொள்ளலாம் எனவும்,  ஏற்கனவே செல்ல வேண்டிய இடத்தை விட வேறு இடத்திற்கு செல்ல டிக்கெட் பதிவு செய்தால், அதற்கு ஆகும் கட்டண வேறுபாடுகளைக் கூடுதலாகச் செலுத்த வேண்டும் என்று அறிவித்தன.

விமான நிறுவனங்களின் இந்த அறிவிப்பால், விமான பயணிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில், ஊரடங்கு  காலத்தில்,  முன்பதிவு ஆகியிருந்த டிக்கெட் கட்டணங்களை திருப்பி அளிக்குமாறு   பயணிகள் கேட்கும் பட்சத்தில், ரத்துக்கட்டணம் எதுவும் இன்றி முழுமையாக விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு திருப்பி அளிக்க வேண்டும் விமான போக்குவரத்து ஒழுங்கு முறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 


Next Story