திரிபுராவுக்கு சவாரி சென்றபோது சென்னை ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கொரோனா - மேற்கு வங்காள ஆஸ்பத்திரியில் அனுமதி
திரிபுராவுக்கு 5 பேரை அழைத்துச் சென்றபோது, சென்னை ஆம்புலன்ஸ் டிரைவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவர் மேற்கு வங்காள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அகர்தலா,
திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 2 குடும்பங்கள், மருத்துவ சிகிச்சைக்காக, கடந்த மார்ச் மாதம் சென்னைக்கு வந்திருந்தன. சிகிச்சை முடிந்ததால், சில நாட்களுக்கு முன்பு திரிபுராவுக்கு திரும்ப அந்த குடும்பத்தினர் முடிவு செய்தனர். சென்னையில் ஒரு ஆம்புலன்சை வாடகைக்கு பிடித்தனர். ஆம்புலன்சை மாறி மாறி ஓட்டுவதற்காக, 2 டிரைவர்கள் வந்தனர்.
கடந்த 27-ந் தேதி இரவு, திரிபுரா மாநிலம் கோமதி மாவட்டம் உதய்பூரில் 3 பேரையும், தெற்கு திரிபுரா மாவட்டம் சாந்திர்பஜாரில் மீதி 2 பேரையும் டிரைவர்கள் இறக்கி விட்டனர். எல்லோரும் வெளிமாநிலங்கள் வழியாக வந்திருப்பதால், 5 பயணிகளுக்கும், 2 டிரைவர்களுக்கும் திரிபுரா சுகாதார அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மறுநாள், 2 டிரைவர்களும் தலைநகர் அகர்தலா அருகே ஒரு ஓட்டலில் தங்கினர். பின்னர், பயணத்தை தொடர்ந்தனர்.
இதற்கிடையே, 7 பேரின் கொரோனா பரிசோதனை அறிக்கை நேற்று முன்தினம் இரவு வெளியானது. இதில், சென்னையைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆனது. மற்றொரு டிரைவருக்கும், திரிபுராவை சேர்ந்த 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து, திரிபுரா அதிகாரிகள், மேற்கு வங்காள அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அந்த ஆம்புலன்ஸ் விவரங்களை கூறி, அந்த டிரைவரை பிடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதை ஏற்று, மேற்கு வங்காள மாநிலம் அலிபுர்தார் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஆம்புலன்சை அதிகாரிகள் மடக்கினர். 2 டிரைவர்களையும் சிலிகுரிக்கு அழைத்துச் சென்றனர். கொரோனா பாதித்த டிரைவர், அங்குள்ள கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. அவர் நன்றாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மற்றொரு டிரைவர், அங்குள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டார். அதுபோல், திரிபுராவை சேர்ந்த 5 பேரும் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். டிரைவரை தொடர்பு கொண்ட போலீசாரும், மற்றவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். டிரைவர்கள், திரிபுராவில் தங்கி இருந்த இடம் தெரியாமல், அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story