கொரோனாவை எதிர்த்து போராடுவோருக்காக 100 பாடகர், பாடகியர் இணைந்து பாடிய பாடல் - நாட்டுக்கு நாளை அர்ப்பணிக்கிறார் லதா மங்கேஷ்கர்
கொரோனா வைரசை எதிர்த்து களத்தில் முன்நின்று போராடுவோருக்காக 100 பாடகர், பாடகியர் இணைந்து ஒரு பாடல் பாடி இருக்கிறார்கள். இந்தப் பாடலை மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
புதுடெல்லி,
கண்ணுக்குத் தெரியாத கொரோனா வைரஸ் என்ற எதிரியை எதிர்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் போரிட்டு வருகிறது. இந்த களத்தில் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் தங்கள் உயிர்களை பணயம் வைத்து முன் நின்று போராடி வருகிறார்கள். இதில் பலர் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்துள்ளனர்.
இவர்களின் தன்னலமற்ற தியாகத்தை போற்றி, கவுரவிக்கிற வகையில் இந்தியாவின் முன்னணி பாடகர், பாடகியர் 100 பேர் ஒன்று சேர்ந்து ஒரு பாடலை பாடி உள்ளனர்.
ஒரே நாடு, ஒரே குரல் என்ற தலைப்பிலான இந்த பாடல், 14 மொழிகளில் பாடப்பட்டுள்ளது.
இதுபற்றி பிரபல பாடகி ஆஷா போஸ்லே கூறியதாவது:-
பொதுமக்களின் உணர்வுகளை எப்போதும் வெளிப்படுத்துகிறவர்கள்தான் பாடகர்கள். கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிராக நாம் அனைவரும் ஒரே தேசமாக பிரதமர் மோடி தலைமையில் ஒன்றுபட்டு போரிடுகிறோம். இந்த சந்தர்ப்பத்தில் நாங்கள் 100 பேர் இந்திய பாடகர்கள் சங்கத்தின் சார்பில் நாட்டின் மீதான எங்கள் அன்பை வெளிப்டுத்துவதற்காக, ஒரே குரல் பாடலை அர்ப்பணிக்க முடிவு செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பாடலை ஆஷா போஸ்லே, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஹரிகரன், சங்கர் மகாதேவன், அனுப் ஜலோட்டா, அல்கா யாக்னிக், , கைலாஷ் கெர், கவிதா கிருஷ்ணமூர்த்தி, குமார் சான, மகாலட்சுமி அய்யர், மனோ, பங்கஜ் உதாஸ், ஷான், சோனு நிகம், தலாத் அஜிஸ், உதித் நாராயணன், ஜஸ்பிர் ஜாசி உள்ளிட்டோர் பாடி உள்ளனர்.
இதுபற்றி இந்திய பாடகர்கள் உரிமைகள் சங்கத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் தாண்டன் கூறும்போது, “பி.எம்.கேர்ஸ் நிதிக்கு உதவுவதற்காக இந்த பாடல் எங்கள் சங்கத்தின் அர்ப்பணிப்பு ஆகிறது. இந்த பாடலில் 100 முன்னணி கலைஞர்கள் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன் நின்று போராடுகிறவர்களையும், வீட்டில் இருந்து கொண்டு அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறவர்களையும் போற்றுகிறார்கள்” என கூறினார்.
இந்தப் பாடல் வெறும பாடல் அல்ல, இது ஒரு தேசிய இயக்கம் என்று ‘எக்ஸ்பி அண்ட் டி பீ லைவ்’ டிஜிட்டல் தளத்தின் சுக்ரித் சிங் தெரிவித்தார். இந்த பாடல், நிகம், பாடகர் சீனிவாஸ், தாண்டன் ஆகியோரும் சிந்தையில் உதித்ததாகும்.
பாடகர் சீனிவாஸ் இதுபற்றி கூறுகையில், “கொரோனாவுக்கு எதிரான போரில் கலைஞர்களாக நாங்கள் எங்களுக்கே உரித்தான வகையில் ஒரு பங்களிப்பை செய்ய விரும்பினோம். நாங்கள் 100 குரல்களுடன் ஒரு பாடலை தொடங்கி உள்ளோம். வேறொன்றும் இல்லை. இது தேசத்தின் இதயங்களை அசைக்கவும், உறுதிப்படுத்தவும் செய்யும். 100 குரல்கள் தேசத்துக்காக ஒற்றுமையாக பாடுகின்றன” என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்த பாடல் வரிகளை ஒவ்வொரு பாடகரும் தங்கள் வீட்டில் இருந்தே பாடிக்கொடுத்துள்ளனர். இந்த பாடல், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி, குஜராத்தி உள்ளிட்ட 14 மொழிகளில் வெளியாகிறது.
மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் இந்த பாடலை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த பாடல் ஒரே நேரத்தில் டி.வி. ரேடியோ, சமூக வலைத்தளம் என 100 டிஜிட்டல் தளங்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story