கொரோனாவுக்கு எதிராக போராடுவோருக்காக 2¼ கோடி சுய பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் - மத்திய அரசு நடவடிக்கை
கொரோனா வைரசுக்கு எதிராக களத்தில் முன்நின்று போராடுவோருக்காக 2¼ கோடி சுய பாதுகாப்பு கருவிகள் வாங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி,
கொரோனா வைரசுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்து வருகிற போரில், தங்கள் உயிரை பணயம் வைத்து களத்தில் முன்நின்று போராடுகிற டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ சார்பு பணியாளர்கள், சுகாதார பணியாளர்களுக்கு கையுறைகள், பாதுகாப்பு கண்ணாடிகள், காலணிகள், கவச உடைகள் உள்ளிட்டவை அடங்கிய சுய பாதுகாப்பு கருவிகள் தேவைப்படுகின்றன.
இவற்றை அணிந்து கொண்டால்தான் அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்.
அந்த வகையில், 2 கோடியே 22 லட்சம் சுய பாதுகாப்பு கருவிகளை வாங்குவதற்கு மத்திய அரசு ‘ஆர்டர்’ செய்துள்ளது. இவற்றில் 1 கோடியே 43 லட்சம் கருவிகள் உள்நாட்டு தயாரிப்பாளர்களால் தயாரித்து வழங்கப்படும்.
இதையொட்டி கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையில் உயர் அதிகாரம் பெற்ற 3-வது குழுவின் தலைவர் பி.டி.வகேலா, டெல்லியில் கூறியதாவது:-
தற்போது நாட்டில் 19 ஆயிரத்து 398 செயற்கை சுவாச கருவிகள் கையிருப்பு உள்ளது. மேலும் 60 ஆயிரத்து 884 செயற்கை சுவாச கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவற்றில் 59 ஆயிரத்து 884 கருவிகள் உள்நாட்டில் தயாரிக்கப்படும்.
2 கோடியே 49 லட்சம் என்-95 மற்றும் என்-99 முக கவசங்கள் வாங்குவதற்கு ‘ஆர்டர்’ செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 1 கோடியே 49 லட்சம் முக கவசங்கள் உள்நாட்டு தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கப்படுகிறது.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தரப்படுகிற மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் உற்பத்தி மாதத்துக்கு 12 கோடியே 23 லட்சத்தில் இருந்து 30 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
4 லட்சத்துக்கும் அதிகமான ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு இருக்கிறது. தற்போதைய தேவைக்கு அவை போதுமானவை.
மேலும் 1 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்களை மருத்துவ ரீதியில் பயன்படுத்த தேவையான மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் கூறும்போது, “கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் புதிதாக 1,993 பேருக்கு கொரோனா தாக்கி உள்ளது. இதன்மூலம் நாட்டில் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது. 8,888 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்துள்ளனர். இது மொத்த நபர்களில் 25.37 சதவீதம் ஆகும்” என்று குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story