கொரோனா உயிரிழப்புகள் விகிதம்: உலகிலேயே இந்தியாவில்தான் குறைவு - மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்


கொரோனா உயிரிழப்புகள் விகிதம்: உலகிலேயே இந்தியாவில்தான் குறைவு - மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்
x
தினத்தந்தி 12 May 2020 8:59 PM IST (Updated: 12 May 2020 8:59 PM IST)
t-max-icont-min-icon

உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா உயிரிழப்புகள் விகிதம் மிகவும் குறைவு என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் இதுவரை 70,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 2,293 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 22,455 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில், உலகிலேயே இந்தியாவில்தான் கொரோனா உயிரிழப்புகள் விகிதம் மிகவும் குறைவு என மத்திய சுகாதாரம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களின் மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சியின் மூலம் ஹர்ஷவர்தன் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், “இந்தியாவில் தினமும் 1 லட்சம் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் விகிதம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது. தற்போது அந்த விகிதம் 31.70 சதவீதமாக இருக்கிறது. இதேபோல் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழப்போர் விகிதம் 7 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதம் வரை உள்ளது. ஆனால் இந்தியாவில் அந்த விகிதம் 3.2 சதவீதம் என்று குறைவான அளவிலேயே இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் சில மாநிலங்களில் உயிரிழப்பு விகிதமானது 3.2 சதவீதத்தை விட குறைவாகவே உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story