சிறைகளில் உள்ள 50% கைதிகளை தற்காலிகமாக விடுவிக்கலாம்: மராட்டிய அரசு அமைத்த குழு முடிவு
கொரோனா அச்சுறுத்தலால் சிறைகளில் உள்ள நெருக்கடியை குறைக்கும் வகையில் 50 % கைதிகளை தற்காலிகமாக விடுவிக்க மராட்டிய அரசு அமைத்த குழு முடிவு செய்துள்ளது.
மும்பை,
இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் அதிகம் பரவியுள்ள மாநிலங்களின் பட்டியலில் மராட்டிய மாநிலம்தான் முதலிடம் வகிக்கிறது. மராட்டியத்தில் தற்போதைய நிலவரப்படி 23401 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து 4,786 பேர் குணமடைந்துள்ளனர். 868 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் உள்ள சிறைகளில் உள்ள நெருக்கடியை குறைக்கும் வகையில், கைதிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.சயத், கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சய் சாஹண்டே, மராட்டிய சிறைத்துறை பொது இயக்குநர் எஸ்.என்.பாண்டே ஆகியோரைக் கொண்ட உயர் மட்ட குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடத்தி மராட்டிய சிறைகளில் உள்ள 50 சதவீத கைதிகளை தற்காலிகமாக விடுவிக்கலாம் என அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். அதன்படி தற்காலிக ஜாமீன் அல்லது பரோல் வழங்கப்பட்டு கைதிகள் படிப்படியாக விடுவிக்க படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதற்கான தேதி உள்ளிட்ட விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. மராட்டியத்தில் தற்போதுள்ள கைதிகளின் எண்ணிக்கையின் படி 35,239 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story