ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கும்-ரெயில்வே வாரியம் அறிவிப்பு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 22 May 2020 1:24 AM GMT (Updated: 22 May 2020 8:19 AM GMT)

ரெயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை, 

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ரெயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முதற்கட்டமாக இந்தியா முழுவதும் 200 ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த ரெயில்களுக்கு ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதைத்தொடர்ந்து டிக்கெட் முன்பதிவு மையங்கள் இன்று(வெள்ளிக் கிழமை) முதல் இயங்கவும் ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து மண்டல முதன்மை தலைமை வர்த்தக மேலாளருக்கு ரெயில்வே வாரியத்தில் இருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று முதல் டிக்கெட் முன்பதிவு மையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்தந்த மண்டலங்களில் எத்தனை டிக்கெட் கவுண்ட்டர்கள் திறந்திருக்க வேண்டும் என முதன்மை தலைமை வர்த்தக மேலாளர் முடிவு செய்து கொள்ளவேண்டும். 

டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் சமூக இடைவெளி விட்டு நிற்கவும், மேலும் சுகாதார விதிமுறைகளையும் கடைப்பிடிக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story