மேற்கு வங்காளத்துக்கு ரூ.1,000 கோடி நிதி உதவி - பிரதமர் மோடி அறிவிப்பு; புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார்


மேற்கு வங்காளத்துக்கு ரூ.1,000 கோடி நிதி உதவி - பிரதமர் மோடி அறிவிப்பு; புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார்
x
தினத்தந்தி 23 May 2020 5:30 AM IST (Updated: 23 May 2020 2:13 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு வங்காளத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். பின்னர், மேற்கு வங்காளத்துக்கு முதல் கட்டமாக ரூ.1,000 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

கொல்கத்தா,

வங்க கடலில் உருவாகி வடக்கு நோக்கி நகர்ந்து வந்த ‘உம்பன்’ புயல் மேற்கு வங்காள மாநிலம் டிகாவுக்கும், வங்காளதேசத்தின் ஹாடியா தீவுக்கும் இடையே கடந்த புதன்கிழமை கரையை கடந்தது. அப்போது மேற்கு வங்காளத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. செல்போன் கோபுரங்கள் சரிந்தன. ஏராளமான ஏக்கரில் நெற்பயிர்கள் மூழ்கி நாசமாயின. மின்சாரம் தாக்கியதிலும், மரங்கள் சாய்ந்ததிலும், சுவர் இடிந்து விழுந்தும் 77 பேர் பலி ஆனார்கள். மேலும் ஏராளமான பேர் காயம் அடைந்தனர்.

இந்த புயல் மேற்கு வங்காளத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானா மாவட்டங்கள், மேற்கு மிட்னாப்பூர், கிழக்கு மிட்னாப்பூர், ஹவுரா, ஹூக்ளி, கொல்கத்தா மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதேபோல் அண்டை மாநிலமான ஒடிசாவிலும் கடலோர மாவட்டங்களில் புயலால் சேதம் ஏற்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி மேற்கு வங்காளத்துக்கு வந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வேண்டும் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி நேற்று காலை தனி விமானம் மூலம் கொல்கத்தா சென்றார். விமான நிலையத்தில் அவரை மேற்கு வங்காள கவர்னர் ஜக்தீப் தங்கர், முதல்-மந்திரி மம்தா பானர்ஜி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் மோடி ஹெலிகாப்டரில் சென்று, புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். அவருடன் மம்தா பானர்ஜியும் சென்று இருந்தார்.

சேத பகுதிகளை பார்வையிட்ட பின்னர் கொல்கத்தா திரும்பிய பிரதமர் மோடி புயல் சேத பாதிப்பு, நிவாரண நடவடிக்கைகள் குறித்து கவர்னர், முதல்-மந்திரி மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு மோடி வெளியிட்ட வீடியோ செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் சமயத்தில் ஒடிசா மாநிலத்தை புயல் தாக்கியது. இப்போது ஓராண்டுக்கு பிறகு புயல் மீண்டும் கடலோர பகுதிகளை தாக்கி இருக்கிறது. இதில் மேற்கு வங்காள மாநில மக்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மத்திய-மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டதால் சேதங்களை குறைத்து இருக்கிறோம். என்றாலும் 70-க்கும் அதிகமானோரை நம்மால் காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஒட்டுமொத்த தேசமும், மத்திய அரசும் மேற்கு வங்காள மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது. மேற்கு வங்காள மாநிலத்துக்கு புயல் சேத நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.1,000 கோடி வழங்கும். புயலால் உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்.

மேற்கு வங்காளத்துக்கு மத்திய குழு அனுப்பப்பட்டு புயல், மழையால் பயிர்கள், மின்சாரம் உள்ளிட்ட துறைகள், வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றி விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்படும். ஒருபுறம் கொரோனா பெருந்தொற்றை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கும் நாம் மற்றொரு புறம் சில பகுதிகளில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளையும் சரிசெய்ய வேண்டி இருக்கிறது. புயல் நிவாரண பணிகள் நடைபெறும் பகுதிகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு பாதிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் கட்டமைக்கப்படும். இவ்வாறு மோடி கூறினார்.

இதேபோல் ஒடிசாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். சேத பகுதிகளை பார்வையிட்ட பின்னர் புவனேஸ்வர் திரும்பிய பிரதமர், புயல் சேத பாதிப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கவர்னர் கணேஷ் லால், முதல்-மந்திரி நவீன் பட்நாயக், மத்திய மந்திரிகள் தர்மேந்திர பிரதான், பிரதாப் சாரங்கி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய நரேந்திரமோடி, ‘ஒடிசா மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் உயிரிழப்பு மற்றும் பொருளிழப்பு குறைந்துள்ளது. இருப்பினும் வீடுகள், மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. புயல் சேத நிவாரண பணிகளுக்காக முதல் கட்டமாக மத்திய அரசு ரூ.500 கோடி நிதி உதவி வழங்கும்’ என்று கூறினார்.

Next Story