கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை, மொரீஷியஸ் தலைவர்களுடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இலங்கை அதிபர், மொரீஷியஸ் பிரதமர் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, இலங்கையில் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க எடுத்து வரும் நடவடிக்கைகளை மோடியிடம் கோத்தபய எடுத்துரைத்தார். கொரோனாவுக்கு எதிராக கோத்தபய ராஜபக்சே தலைமையில் இலங்கை உறுதியாக போராடி வருவதாக மோடி பாராட்டினார்.
இலங்கை மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த ஆலோசனையின்போது, இலங்கையில் இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களை விரைவுபடுத்த இருவரும் சம்மதம் தெரிவித்தனர். முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது பற்றி ஆலோசனை நடத்தினர்.
இந்திய தனியார் துறையினர் இலங்கையில் முதலீடு செய்வதை அதிகரிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கொரோனாவை எதிர்கொள்வதிலும், பொருளாதார பாதிப்பை சீரமைப்பதிலும் இலங்கைக்கு இந்தியா உதவும் என்று மோடி உறுதி அளித்தார்.
இந்த தகவல்களை பிரதமர் மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பின்னர், மொரீஷியஸ் பிரதமர் பிரவீந்த் ஜகநாத்துடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக, ஜகநாத்துக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.
ஒரே கலாசாரம், பண்பாடு அடிப்படையில், இந்திய-மொரீஷியஸ் மக்களிடையே நல்லுறவு நிலவுவதாக மோடி குறிப்பிட்டார். இந்த சிக்கலான தருணத்தில், மொரீஷியஸ் சகோதர, சகோதரிகளுக்கு இந்தியர்கள் துணை நிற்பார்கள் என்று அவர் உறுதி அளித்தார்.
Related Tags :
Next Story