இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷியாவில் பயிற்சி தொடங்கியது


இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷியாவில் பயிற்சி தொடங்கியது
x
தினத்தந்தி 25 May 2020 4:00 AM IST (Updated: 25 May 2020 3:33 AM IST)
t-max-icont-min-icon

இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷியாவில் மீண்டும் பயிற்சி தொடங்கியது.

பெங்களூரு, 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை 2022-ம் ஆண்டு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டு ஆவதையொட்டி இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்தில் இந்திய விமானப்படையை சேர்ந்த 4 விமானிகள், ரஷியாவில் விண்வெளி பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் பயிற்சி நிறுத்தப்பட்டது. இப்போது விண்வெளி வீரர்களுக்கான பயிற்சி ரஷியாவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷிய விண்வெளி கழகமான ரஷ்காஸ்மாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்திய விண்வெளி வீரர்கள் 4 பேருக்கு ககரின் ஆராச்சி மற்றும் சோதனை விண்வெளி வீரர்கள் பயிற்சி மையத்தில்(ஜி.சி.டி.சி.) கடந்த 12-ந் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த 4 வீரர்களும் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நிறுவனம் தனது டுவிட்டரில், இந்திய விண்வெளி வீரர்கள் தேசிய கொடியுடன் கூடிய முக கவசம் அணிந்து பயிற்சி பெறுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.


Next Story