இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு விமான போக்குவரத்து தொடங்கியது: 630 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி


இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு விமான போக்குவரத்து தொடங்கியது: 630 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி
x
தினத்தந்தி 26 May 2020 5:45 AM IST (Updated: 26 May 2020 1:00 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 2 மாதங்களுக்கு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நேற்று விமான போக்குவரத்து தொடங்கியது. முதல் நாளிலேயே 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

புதுடெல்லி, 

கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் இந்தியாவில் பஸ், ரெயில், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

விமான போக்குவரத்தை பொறுத்தமட்டில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகள் சேவை அறவே நிறுத்தப்பட்டது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை மீட்டு வருவதற்காக மட்டும் சில விமானங்கள் இயக்கப்பட்டன. 4-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில், உள்நாட்டு சிவில் விமான போக்குவரத்து 25-ந் தேதி முதல் தொடங்கும் என்று அந்த இலாகா மந்திரி ஹர்தீப் சிங் பூரி கடந்த 20-ந் தேதி அறிவித்தார்.

பயணிகள் கட்டாயம் முக கவசம் அணியவேண்டும், ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. கொரோனா தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அறிவிக்கப்பட்டபடி 2 மாதங்களுக்கு பிறகு நேற்று இந்தியாவில் விமான போக்குவரத்து தொடங்கியது. மேற்கு வங்காளம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் விமானங்கள் இயக்கப்பட்டன.

முதல் விமானம் டெல்லியில் இருந்து நேற்று அதிகாலை 4.45 மணிக்கு மராட்டிய மாநிலம் புனே புறப்பட்டு சென்றது. இதேபோல் மும்பையில் இருந்து முதல் விமானம் காலை 6.45 மணிக்கு பீகார் தலைநகர் பாட்னா கிளம்பிச் சென்றது.

டெல்லியில் இருந்து 2 குழந்தைகள் உள்பட 29 பயணிகளுடன் முதல் விமானம் நேற்று காலை 8.40 மணிக்கு சென்னை வந்தது. மற்றொரு விமானம் 5 குழந்தைகள் உள்பட 109 பயணிகளுடன் காலை 9.15 மணிக்கு சென்னையில் தரை இறங்கியது. 3-வது விமானம் 36 பயணிகளுடன் காலை 10.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னை வந்தது.

சென்னை விமானநிலையத்தில் இருந்து முதன் முதலாக நேற்று காலை 6.35 மணிக்கு இண்டிகோ விமானம் ஒன்று 116 பயணிகளுடன் டெல்லி புறப்பட்டு சென்றது. அதன்பிறகு பெங்களூரு, கொச்சி, கோவை, வாரணாசி, திருவனந்தபுரம் நகரங்களுக்கும் விமானங்கள் சென்றன.

முன்னதாக சென்னையில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு மதுரை புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. அதில் செல்ல இருந்த பயணிகள் வேறு ஒரு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். மதுரை சென்ற அந்த விமானம் பின்னர் அங்கிருந்து 9 மணிக்கு புறப்பட்டு சென்னை வந்தது.

மற்றொரு விமானம் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு 12.25 மணிக்கு மதுரை வந்து, 1 மணிக்கு மீண்டும் பெங்களூரு சென்றது.

இதற்கிடையே காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து மதுரை வந்தடைந்த விமானம், மீண்டும் 12 மணிக்கு சென்னை சென்றது.

இது தவிர ஏர் இந்தியா விமானம் மதியம் 1.30 மணிக்கு டெல்லியில் இருந்து மதுரை வந்தடைந்து, மீண்டும் 2.45 மணிக்கு அங்கிருந்து இருந்து திருவனந்தபுரம் சென்றது. அதன்பிறகு அந்த விமானம் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு 5.50 மணிக்கு மதுரை வந்தடைந்தது. பின்னர் 6.40 மணிக்கு டெல்லி சென்றது.

இதேபோல் சென்னையில் இருந்து நேற்று காலை 11.15 மணிக்கு தூத்துக்குடி சென்றுவிட்டு மீண்டும் சென்னை வர இருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தில் சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்ல 38 பேரும், தூத்துக்குடியில் இருந்து சென்னை வர 56 பேரும் முன்பதிவு செய்து இருந்தனர்.

நேற்று முதல் திருச்சியில் இருந்து சென்னைக்கு 2 விமானங்களும், பெங்களூருவுக்கு ஒரு விமானமும் இயக்கப்படும் என்று இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்து இருந்தது. அதன்படி, திருச்சியில் இருந்து நேற்று காலை 10.45 மணிக்கு சென்னை புறப்பட வேண்டிய விமானத்தில் 30 பேரும், இரவு 9.20 மணிக்கு புறப்பட வேண்டிய விமானத்தில் 30 பயணிகளும் முன்பதிவு செய்து இருந்தனர். ஆனால் அந்த இரு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

டெல்லியில் இருந்து நேற்று காலை 9.15 மணிக்கு 66 பயணிகளுடன் கோவை வந்த விமானம் காலை 10.10 மணிக்கு 80 பயணிகளுடன் டெல்லி புறப்பட்டு சென்றது. இதேபோல் சென்னையில் இருந்து காலை 10 மணிக்கு 71 பயணிகளுடன் கோவை சென்ற விமானம் அங்கிருந்து 10.23 மணிக்கு 30 பயணிகளுடன் மீண்டும் சென்னை புறப்பட்டது. பெங்களூருவில் இருந்து 108 பேருடன் கோவை வந்த விமானம் 63 பயணிகளுடன் மாலை 5 மணிக்கு பெங்களூரு புறப்பட்டு சென்றது.

சென்னையில் இருந்து 117 பயணிகளுடன் இரவு 7.50 மணிக்கு கோவை சென்ற விமானம், 27 பயணிகளுடன் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு மீண்டும் சென்னை வந்தது.

மும்பை, ஐதராபாத்தில் இருந்து கோவைக்கு நேற்று வர வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு 25 விமானசேவைகளுக்கு மேல் இயக்க வேண்டாம் என்று மத்திய அரசை தமிழக அரசு கேட்டுக்கொண்டது

இதனால் டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு நேற்று 16 விமானங்களும், இதேபோல் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கோவை, மதுரை, போர்ட்பிளேர் உள்ளிட்ட நகரங்களுக்கு 19 விமானங்களும் இயக்கப்பட்டதாக விமான போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.

கொரோனா பரவலை தடுப்பதற்காக விமானத்திலும், விமான நிலையங்களிலும் தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட்டது

பல்வேறு ஊர்களில் இருந்தும் சென்னை வந்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டு, இடது கையில் முத்திரை குத்தப்பட்டது. டெல்லியில் இருந்து பகலில் வந்த ஒரு விமானத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வந்தார். அவரது கையிலும் முத்திரை குத்தப்பட்டது.

உள்நாட்டு விமானங்கள் மூலம் தமிழகத்துக்கு வரும் பயணிகள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்ய கட்டாயம் இணையதள பாஸ் (இ பாஸ்) பெற வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது. அதன்படி விமான நிலையத்தில் பயணிகள் தங்கள் செல்போனில் உள்ள அந்த பாஸை அதிகாரிகளிடம் காட்டினார்கள். அந்த பாஸ் இல்லாத பயணிகள் தங்கள் சுயவிவரங்களை தெரிவிப்பதற்காக இரு கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு அவர்கள் தங்களை பற்றிய விவரங்களை தெரிவித்தனர்.

பயணிகள் அனைவரும், வீட்டுக்கு சென்றதும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதாகவும், காய்ச்சல், இருமல், சளி அறிகுறிகள் இருந்தால் சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்வதாகவும் கூறிவிட்டு விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர்.

பயணிகள் யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் அவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்வதற்காக சென்னை விமானநிலையத்தில் ஆம்புலன்சுகள் நிறுத்தப்பட்டு இருந்தன.

சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகளை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நேரில் பார்வையிட்டார்.

குறைவான பயணிகள் உள்ளிட்ட காரணங்களால் முதல் நாளான நேற்று நாடு முழுவதும் 630 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.

நேற்று நாடு முழுவதும் 532 விமானங்கள் இயக்கப்பட்டதாகவும், அவற்றில் 39 ஆயிரத்து 231 பயணிகள் பயணம் செய்ததாகவும், மந்திரி ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். சென்னை விமானநிலையத்துக்கு அதிகபட்சம் 25 விமானங்கள் வரும் என்றும், ஆனால் அங்கிருந்து எத்தனை விமானங்கள் புறப்பட்டு செல்வது என்பதற்கு இலக்கு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

விமானங்கள் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால், விமான நிலையத்துக்கு வந்திருந்த பயணிகள் மிகுந்த ஏமாற்றமும், அவதியும் அடைந்தனர்.

கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதன் காரணமாக, பரபரப்பாக இயங்கும் விமானநிலையங்களை கொண்ட மராட்டியம், தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள், அந்த விமானநிலையங்களில் இருந்து அதிக விமானங்களை இயக்க ஆர்வம் காட்டாததே, நேற்று குறைவான விமானங்கள் இயக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் என்றும் விமான போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன. மும்பை விமானநிலையத்தில் இருந்து முடிந்தவரை குறைந்த அளவில் விமானங்களை இயக்குமாறு மத்திய அரசை மாரட்டிய அரசு கேட்டுக் கொண்டு உள்ளது.

ஆந்திராவில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), மேற்கு வங்காளத்தில் 28-ந் தேதியும் விமான சேவை தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story