சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க லடாக் எல்லையில் இந்தியாவும் படைகளை குவிக்கிறது


சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க லடாக் எல்லையில் இந்தியாவும் படைகளை குவிக்கிறது
x
தினத்தந்தி 30 May 2020 11:30 PM GMT (Updated: 30 May 2020 11:07 PM GMT)

சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க லடாக் எல்லையில் இந்தியாவும் படைகளை குவித்து வருகிறது.

புதுடெல்லி,  

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. லடாக்கில் எல்லை பகுதியில் சீன வீரர்கள் அவ்வப்போது அத்துமீறி இந்திய பகுதிக்குள் நுழைய முயற்சிப்பதும், அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்துவதும் நடந்து வருகிறது. அங்குள்ள பங்கோங் சோ ஏரி பகுதியில் இதேபோல் சீன வீரர்கள் கடந்த 5 மற்றும் 6-ந் தேதிகளில் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும், மோதலும் ஏற்பட்டது.

இதுபற்றி லடாக் தன்னாட்சி கவுன்சிலின் நிர்வாக கவுன்சிலர் கோங்சோக் ஸ்டாசின் கூறுகையில், பங்கோங் சோ பகுதியில் சீன வீரர்கள் எத்தனை பேர் ஊடுருவினார்கள் என்று சொல்வது கடினம் என்றும் போர் பிங்கர், கிரீன் டாப் பகுதிகளில் அவர்கள் முகாமிட்டு இருந்ததாகவும் தெரிவித்தார்.

லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை குவித்து இருக்கிறது. மேலும் அங்குள்ள விமானப்படை தளத்திலும் தனது போர் விமானங்களை நிறுத்தி இருக்கிறது. இந்த நிலையில் சீன நாடாளுமன்றத்தில் பேசிய அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங், எத்தகைய போர்ச்சூழலுக்கும் தயாராக இருக்குமாறு ராணுவ வீரர்களை கேட்டுக் கொண்டார்.

எல்லையில் சீனா படைகளை குவித்து இருப்பதும், அந்த நாட்டின் அதிபர் இவ்வாறு பேசி இருப்பதும் இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே கருதப்படுகிறது.

இதனால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. என்றாலும் பதற்றத்தை தணிப்பதற்கான தூதரக ரீதியில் முயற்சிகள் நடைபெற்று வருவதாக சீனா கூறி இருக்கிறது. இதேபோல் இந்திய தரப்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சமரச முயற்சிகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து வந்த போதிலும், சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா தயாராகி வருகிறது. கிழக்கு லடாக்கில் உண்மையான கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவமும் தனது படைகளை குவித்து வருகிறது. ராணுவ தளபதிகளின் உயர்மட்ட குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி அங்கு கூடுதல் வீரர்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, முன்பு டோக்லாம் பகுதியில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்கு இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டது போல், இப்போது லடாக் எல்லையில் நிலவும் பிரச்சினையையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று சீனாவின் ‘குளோபல் டைம்ஸ்‘ பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த விஷயத்தில் இரு நாடுகளும் அமெரிக்காவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியதும், அதை இந்தியாவும், சீனாவும் நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Story