‘இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும்’ - பிரதமர் மோடி உறுதி
இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் மோடி உறுதியுடன் தெரிவித்து உள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பல சீர்திருத்தங்களை செய்ய அரசு தீர்மானித்து இருக்கிறது.
கொரோனாவை கட்டுப்படுத்த அரசு ஒருபுறம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்த போதிலும், பொருளாதாரத்திலும் கவனம் செலுத்துகிறோம். நாட்டு மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும். அதே சமயத்தில் பொருளாதாரத்தையும் நிலைநிறுத்தி மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லவேண்டும். பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை நாம் துணிச்சலுடன் மேற்கொள்ளவேண்டும்.
பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை அரசு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் நிச்சயமாக மீட்போம். விவசாயம், சுயதொழில் செய்வோர் நுட்பத்தால் பொருளாதாரம் மீளும். நாடு மீண்டும் பொருளாதார வளர்ச்சியை எட்டும். இந்திய தொழில்துறையின் மீது முழுநம்பிக்கை இருக்கிறது.
ஊரடங்கை அமல்படுத்தியதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தி இருக்கிறோம். அதேசமயம் படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி பொருளாதாரத்துக்கு ஊக்கம் அளித்து வருகிறோம்.
ஏழைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் பொருள், ஏழை பெண்கள், முதியோருக்கு பணஉதவி என ரூ.53 ஆயிரம் கோடி நிதி உதவி திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறோம், விவசாயிகளின் நலனுக்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம்.
நாட்டுக்கு நீண்ட காலம் பயன் அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் உலக நாடுகளுக்காக நாம் பொருட்களை உற்பத்தி செய்யும் நிலை ஏற்படும் போது நாம் முக்கிய துறைகளில் யாரையும் சார்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்படாது. நாட்டின் இறக்குமதி குறையும்.
ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பு துறை அல்லாத மற்ற துறைகளில் தனியாருக்கு அனுமதி அளித்து இருக்கிறோம். நிலக்கரி சுரங்கம், விண்வெளி, அணுசக்தி துறைகளில் தனியார் முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. சுற்றுச்சூழல் துறையிலும் தனியார் பங்களிப்புக்கு வழிவகை செய்யப்படும்.
வருங்காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பதோடு தோல் பொருட்கள், காலணிகள் தயாரிப்பு, குளிர்சாதன எந்திரங்கள் தயாரிப்பு போன்றவற்றில் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
நாடுகளின் உற்பத்தி திறன், பொருளாதார வளர்ச்சி, முதலீடு ஆகியவற்றின் அடிப்படையில் கடன் வாங்கும் திறன்பற்றி மதிப்பீடு செய்யும் மூடிஸ்‘ நிறுவனம், மந்தமான வளர்ச்சி, சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் தாமதம் போன்ற காரணங்களால் முதலீட்டு விஷயத்தில் இந்தியாவுக்கான தரவரிசையை 22 ஆண்டுகளில் முதன் முதலாக குறைத்து இருக்கிறது.
இந்த நிலையில் இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் பேசுகையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்போம் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
Related Tags :
Next Story