வெளிமாநில தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு`
வெளிமாநில தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் பீதியடைந்த பிற மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டினர். பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதையும் மீறி பலர் பல கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர்.
இதற்கிடையே, வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்லும் விவகாரம் தொடர்பாக சுப்ரீம்கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர்.ஷா முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கடந்த 3-ந் தேதி வரை 4,200 சராமிக் ரெயில்கள் இயக்கப்பட்டு உள்ளன. இந்த ரெயில்கள் மூலம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்றிருக்கிறார்கள். இதில் உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம். இனியும் எத்தனை தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்?, அவர்களுக்காக எத்தனை சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்பதை மாநில அரசுகள் தான் சொல்ல வேண்டும் என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து நீதிபதிகள் கீழ்க்கண்டவாறு உத்தரவு பிறப்பித்தனர்.
வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மாநில அரசுகளுக்கு அதிகபட்சமாக 15 நாட்கள் அவகாசம் அளிக்க கோர்ட்டு முடிவு செய்துள்ளது. இதற்குள்ளாக வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி விட வேண்டும். சொந்த ஊரில் அவர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பு மற்றும் நிவாரண விவரங்களை கோர்ட்டில் அறிக்கையாக அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
Related Tags :
Next Story