ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக அலைந்து ஆம்புலன்சிலேயே உயிர்விட்ட கர்ப்பிணி - உத்தரபிரதேசத்தில் பரிதாபம்
ஆஸ்பத்திரியில் படுக்கை கிடைக்காமல் ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக அலைந்து ஆம்புலன்சிலேயே ஒரு கர்ப்பிணி உயிர்விட்ட பரிதாப சம்பவம், உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.
நொய்டா,
உத்தரபிரதேச மாநிலம் நொய்டா-காசியாபாத் எல்லையில் கோடா காலனியை சேர்ந்தவர் விஜேந்தர் சிங் (வயது 30). இவருடைய மனைவி நீலம் (30), 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அவர் டெல்லி அருகே நொய்டாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவ்வப்போது மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் நீலத்துக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால், ஒரு ஆம்புலன்ஸ் வரவழைத்து, வழக்கமாக மருத்துவ ஆலோசனை பெற்று வந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு அவரை கணவர் விஜேந்தர் சிங் கூட்டிச் சென்றார்.
ஆனால், அங்கு படுக்கை இல்லை என்று கூறி, அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக அலைந்தநிலையில், 13 மணி நேரத்தில் ஆம்புலன்சிலேயே நீலம், பிரசவ வேதனையில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் டெல்லி, உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
இதுகுறித்து அவருடைய கணவர் விஜேந்தர் சிங் கூறியதாவது:-
நொய்டா, கவுதம் புத்தா நகர், வைஷாலி, காசியாபாத் என ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக அலைந்தோம். இவற்றில் அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரி என 8 ஆஸ்பத்திரிகள் அடங்கும். ஆனால், படுக்கை வசதி இல்லை என்று எல்லா ஆஸ்பத்திரிகளிலும் திருப்பி அனுப்பினர். இறுதியாக, நொய்டாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியின் வாசலில் ஆம்புலன்சிலேயே என் மனைவி இறந்து விட்டார் என்று அவர் கூறினார்.
அவரது பேட்டி, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து கவுதம புத்தா நகர் மாவட்ட கலெக்டர் சுஹாஸ், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால், கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் கடந்த 2 வாரத்தில் நடக்கும் 2-வது உயிரிழப்பு இதுவாகும். கடந்த மாதம் 25-ந் தேதி, ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியாக அலைந்தும் சிகிச்சை கிடைக்காததால், ஒரு பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.
Related Tags :
Next Story