இந்திய-சீன எல்லை பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண முடிவு: வெளியுறவு அமைச்சகம் அறிக்கை
இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, எல்லை பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண ஒப்புக்கொள்ளப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
லடாக் எல்லையில் பதற்றத்தை தணிப்பதற்காக கிழக்கு லடாக்கில், உண்மையான எல்லை கட்டுப்பாடு கோடு (எல்.ஏ.சி.) பகுதியில் சீன எல்லைக்குள் உள்ள மால்டோ என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரு நாடுகளின் உயர் அதிகாரிகளும் சந்தித்து பேசினார்கள்.
இந்த பேச்சுவார்த்தையில் இந்திய தரப்பில் 14-வது படைப்பிரிவின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழுவினரும் சீன தரப்பில் திபெத் ராணுவ மாவட்ட தளபதி லியூ லின் தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை சுமுமாகவும் ஆக்கபூர்வமாகவும் அமைந்து இருந்தது. பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பது என இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. எல்லைப் பகுதிகளில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவ ராணுவ மற்றும் தூதரக ரீதியில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்றும், இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுவடையும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பிலும் ஏற்கனவே செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களின்படியும், இந்தியா-சீனாவின் அபிவிருத்திக்கு எல்லையில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவ வேண்டும் என்று இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்பாடு ஆகியவற்றின்படியும் எல்லை பிரச்சினையை சமாதான முறையில் தீர்த்துக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா-சீனா இடையே தூதரக உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் ஆகி இருக்கும் இந்த சூழ்நிலையில் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதன் மூலம் பரஸ்பர உறவை மேலும் பலப்படுத்த முடியும் என்ற கருத்தும் பேச்சுவார்த்தையின் போது தெரிவிக்கப்பட்டது என்று அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story