வங்கிக்கடன் வட்டிக்கு வட்டியா? 3 நாளில் முடிவெடுக்க ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


வங்கிக்கடன் வட்டிக்கு வட்டியா? 3 நாளில் முடிவெடுக்க ரிசர்வ் வங்கிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 13 Jun 2020 4:00 AM IST (Updated: 13 Jun 2020 12:14 AM IST)
t-max-icont-min-icon

வங்கிக்கடன் மீதான வட்டிக்கு வட்டி விதிக்கப்படுமா? என்பது குறித்து 3 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

கொரோனா பாதிப்பை தொடர்ந்து மக்களின் நிதி நெருக்கடியை குறைக்க வங்கிகளில் பெற்ற கடன்களின் மாதத் தவணையை 3 மாதங்களுக்கு ஒத்தி வைக்க ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாகவும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை கடந்த 4-ந் தேதி காணொலி காட்சி மூலம் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு வட்டி தள்ளுபடி தொடர்பாக இந்த வழக்கில் எழுப்பப்பட்ட கேள்விகள் மீது 12-ந் தேதிக்குள் (நேற்று) அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய காணொலி அமர்வில் நேற்று மீண்டும் நடைபெற்றது.

விசாரணை தொடங்கியதும் பேசிய நீதிபதிகள், ‘இது, ஊரடங்கு காலகட்டத்தில் வங்கிக்கடன்கள் மீதான முழு வட்டியையும் தள்ளுபடி செய்வது பற்றிய விவகாரம் அல்ல. ஊரடங்கை தொடர்ந்து ரிசர்வ் வங்கியால் அவகாசம் அளிக்கப்பட்ட மாத தவணை மீதான வட்டிக்கு வட்டி விதிக்கப்படுமா? என்பது பற்றியதே இப்போதைய கேள்வி’ என்று நீதிபதிகள் கூறினார்கள். தொடர்ந்து இந்த வழக்கு குறித்து ஒரு சமமான பார்வையை மேற்கொள்ளவும் பரவலான அளவுகோல்கள் கடைப்பிடிக்கவும் கோர்ட்டு விரும்புகிறது என்றும் தெரிவித்தனர்.

அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இது தொடர்பாக ஒரு அறிக்கை தாக்கல் செய்து இருப்பதாகவும் இந்த விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கியிடம் மேலும் ஆலோசனை கோரியிருப்பதாகவும் கூறினார்.

உடனே நீதிபதிகள், ‘கடன்கள் மீதான தவணை மற்றும் அதற்கான வட்டி செலுத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை. அதில் நீதிமன்றம் தலையிடவும் இல்லை. ஆனால் ரிசர்வ் வங்கி வழங்கிய சலுகை காலத்துக்கும் வட்டி விதிக்கப்பட்டுள்ளதுதான் இப்போதைய கேள்வி. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய நிதி அமைச்சகம் ஒரு கூட்டத்தை கூட்டி ஆலோசித்து கோர்ட்டுக்கு 3 நாட்களில் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

பின்னர் வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
1 More update

Next Story