கொரோனா சிகிச்சைக்கு புதிய நெறிமுறைகள் - மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது


கொரோனா சிகிச்சைக்கு புதிய நெறிமுறைகள் - மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது
x
தினத்தந்தி 13 Jun 2020 11:15 PM GMT (Updated: 13 Jun 2020 9:13 PM GMT)

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளானோரின் சிகிச்சையில் பின்பற்ற புதிய நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

புதுடெல்லி,

சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையெல்லாம் புரட்டிப்போட்டு வருகிறது. இன்னும் தடுப்பூசி சந்தைக்கு வரவில்லை. இதே போன்று கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருந்தும் கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு வரவில்லை.

எனவே கொரோனா அறிகுறிகளுக்கு ஏற்றவாறு சோதனை அடிப்படையில் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அந்த சிகிச்சையில்தான் நோயாளிகள் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு திருத்தப்பட்ட நெறிமுறைகளை மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* மலேரியா மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப நிலையில், அர்த்தமுள்ள பலன்களை அடைவதற்கு கொடுக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்று முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்தை கொடுக்கக்கூடாது

(இதற்கு முன்பு கொரோனா தீவிரமாக பாதித்தவர்களுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை அஜித்ரோமைசின் மாத்திரைகளுடன் சேர்த்து தரலாம் என்று கூறி இருந்த நெறிமுறையை இப்போது மத்திய சுகாதார அமைச்சகம் திரும்பப்பெற்றுள்ளது,)

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பொறுத்தவரையில், கொரோனா வைரசுக்கு எதிராக ‘இன்விட்ரோ’ செயல்பாட்டை நிரூபித்துக்காட்டி உள்ளது. பல சிறிய அளவிலான ஒற்றை மைய ஆய்வுகளில் இது பயன் அளிப்பதாக காட்டப்பட்டுள்ளது.

ஆனாலும்கூட, கடுமையான வரம்புகளை கொண்ட பல பெரிய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பெரிய அளவுக்கு பலன் தரக்கூடிய முடிவுகள் கிடைக்கவில்லை. குறிப்பாக மரணத்தை தடுப்பதில், அர்த்தமுள்ள விளைவுகளை ஏற்படுத்துவதில் சாதகமான முடிவு கிடைக்கவில்லை. எனவே, அதன் பயன்பாட்டுக்கு பின்னால் உள்ள ஆதாரங்கள், மற்ற மருந்துகளைப்போல மட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன.

இது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகளுக்காக காத்திருக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட நோயாளிகளிடம் கலந்து பேசி முடிவு எடுத்துதான் வழங்க வேண்டும். பிற வைரஸ் தடுப்பு மருந்துகளைப்போலவே இந்த மருந்தைகயும் நோயின் போக்கில் ஆரம்பத்தில் பயன்படுத்த வேண்டும். இதனால் அர்த்தமுள்ள பலன் கிடைக்கலாம்.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை பரிந்துரைப்பதற்கு முன்பாக நோயாளிக்கு இ.சி.ஜி. பரிசோதனை ஒன்றை செய்து பார்த்து விடுவது நல்லது.

* அவசர கால பயன்பாட்டுக்கு வைரஸ் தடுப்பு மருந்தான ‘ரெம்டெசிவிர்’ பரிந்துரைக்கலாம்.

* கொரோனா தீவிரம் மிதமாக இருக்கிற நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story