லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன தரப்பில் 35 வீரர்கள் பலி - அமெரிக்க புலனாய்வு அமைப்பு தகவல்

லடாக் எல்லையில் நடந்த மோதலில் சீன தரப்பில் 35 வீரர்கள் பலியானதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக ராணுவம் அறிவித்து உள்ளது. சீனா தரப்பில் 40-க்கு மேற்பட்ட வீரர்கள் பலியானதாக தகவல் வெளியானது. ஆனால் சீன அரசு தங்கள் தரப்பில் எத்தனை வீரர்கள் உயிர் இழந்தனர் என்பது பற்றி வாயை திறக்கவில்லை.
இந்த நிலையில், இந்திய ராணுவத்துடனான மோதலில் சீன தரப்பில் 35 வீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பின் அறிக்கையை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த எண்ணிக்கை பலத்த காயம் அடைந்தவர்களையும் உள்ளடக்கியதாகவும் கூட இருக்கலாம் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.
உன்னிப்பாக கவனிக்கிறோம்
அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், லடாக்கில் உள்ள உண்மையான எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்திய- சீன படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள நிலவரத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்தார்.
இந்திய ராணுவம் தங்கள் தரப்பில் 20 வீரர்கள் பலியானதாக அறிவித்து இருக்கிறது. அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கை- தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் கூறினார்.
எல்லையில் பதற்றத்தை தணிக்க இந்தியாவும் சீனா வும் விருப்பம் தெரிவித்து இருப்பதால், பிரச்சினைக்கு அமைதியான முறையில் தீர்வு காண அமெரிக்கா ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story