சீன எல்லை பிரச்சினைக்கு மோடி அரசின் மோசமான நிர்வாகமே காரணம்- சோனியா காந்தி
சீன எல்லையில் நடந்த பிரச்சினைக்கு மோடி அரசின் மோசமான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேசினார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலில், லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த 20 இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த கூட்டத்தில், சோனியா காந்தி பேசியதாவது:-
கொரோனா வைரஸ் பிரச்சினையை மோடி அரசு தவறாக கையாண்டுள்ளது. மோடி அரசின் மாபெரும் தோல்விகளில் ஒன்றாக இது பதிவு செய்யப்படும்.துரதிருஷ்டம் என்பது தனியாக வருவதில்லை. பொருளாதார பின்னடைவு, கொரோனா பிரச்சினை, சீனாவுடனான எல்லை விவகாரம் என்று சேர்ந்து வந்துள்ளது. ஒவ்வொரு பிரச்சினைக்கும் மோடி அரசின் மோசமான நிர்வாகமும், தவறான கொள்கைகளுமே காரணம். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் இருந்து இப்போதுவரை லடாக்கின் பல்வேறு பகுதிகளில் சீன ராணுவம் இந்திய பகுதிகளில் அப்பட்டமாக ஊடுருவியது, மறுக்க முடியாத உண்மை. கடந்த மே 5-ந் தேதிதான் ஊடுருவல் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால், அதன்பிறகும் பிரச்சினைக்கு தீர்வு காணாமல், நிலைமை முற்ற விடப்பட்டது. அதனால், கடந்த 15-ந் தேதி, மோதல் ஏற்பட்டுள்ளது. நமது ராணுவத்துக்கும், அரசுக்கும் முதலில் முழு ஆதரவு தெரிவித்த கட்சி, காங்கிரஸ்தான். எல்லையில் அமைதி நிலவவும், ஏற்கனவே இருந்த நிலைமையை திரும்பச் செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவோம்.
கொரோனா பிரச்சினையில், சுகாதார கட்டமைப்பு குறைபாடு அம்பலம் ஆகியுள்ளது. மத்திய அரசு சொல்லும் ‘உச்சம்‘ எப்போது வரும் என்றே தெரியவில்லை. இப்போது, மாநில அரசுகளிடம் மத்திய அரசு பொறுப்பை மாற்றி விட்டுவிட்டது. ஆனால், கூடுதல் நிதிஉதவி வழங்கவில்லை. மக்கள், தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளுமாறு விட்டு விட்டது. பிரதமரின் உத்தரவாதத்தையும் மீறி, கொரோனா வைரஸ் இன்னும் அச்சுறுத்தி வருகிறது. ஊரடங்கு காரணமாக, பொருளாதார நடவடிக்கை முடங்கி உள்ளது. நல்ல அறிவுரைகளை மோடி அரசு கேட்க மறுக்கிறது.
இப்போதைய தேவை, பெருமளவிலான ஊக்கச்சலுகைகளும், ஏழைகள் கையில் நேரடியாக பணம் கிடைக்கச் செய்வதும், சிறு, குறு தொழில்நிறுவனங்களை பாதுகாப்பதும் ஆகும். ஆனால், இவற்றை செய்வதற்கு பதிலாக, வெற்று பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளது. அதுவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1 சதவீதத்துக்கு குறைவாகும். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல், கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 17 நாட்களாக உயர்த்தி வருகிறது. இதனால், கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவை நோக்கி பொருளாதாரம் சென்று கொண்டிருக்கிறது.
இதையடுத்து, வேலையில்லா திண்டாட்டம், வருமான வீழ்ச்சி, முதலீட்டு வீழ்ச்சி ஆகியவை ஏற்படும் என்று அஞ்சுகிறேன். இதிலிருந்து மீண்டு எழ நீண்ட காலமாகும். அதுவும், மத்திய அரசு தனது தவறுகளை சரிசெய்து, சரியான பொருளாதார கொள்கைகளை பின்பற்றினால்தான் நடக்கும். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்.
Related Tags :
Next Story