‘நீட்’, ‘ஜே.இ.இ.’ நுழைவுத்தேர்வுகளை எப்போது நடத்தலாம்? - ஆய்வு செய்ய குழு அமைப்பு


‘நீட்’, ‘ஜே.இ.இ.’ நுழைவுத்தேர்வுகளை எப்போது நடத்தலாம்? - ஆய்வு செய்ய குழு அமைப்பு
x
தினத்தந்தி 3 July 2020 4:00 AM IST (Updated: 3 July 2020 2:59 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’, ‘ஜே.இ.இ.’ போன்ற நுழைவுத்தேர்வுகளை நடத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வருவதால் கல்வி நிறுவனங்களை திறக்க முடியாமல் மத்திய-மாநில அரசுகள் தவித்து வருகின்றன. இதனால் மாணவ-மாணவிகளும் பள்ளி, கல்லூரிகள் திறப்பது எப்போது? என்பது தெரியாமல் தங்களின் கல்வி எதிர்காலம் குறித்து கலக்கத்தில் உள்ளனர்.

இதற்கிடையே 12-ம் வகுப்பு முடித்து மருத்துவம், என்ஜினீயரிங் போன்ற உயர்கல்விக்கு செல்லும் மாணவ-மாணவிகள், இந்த படிப்புகளுக் கான நுழைவுத்தேர்வுகளான ‘நீட்’, ‘ஜே.இ.இ.’ போன்ற தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நுழைவுத்தேர்வுகளுக்கான அறிவிப்பும் ஏற்கனவே அரசு வெளியிட்டு இருந்தது.

குறிப்பாக ‘நீட்’ தேர்வு வருகிற 26-ந்தேதியும், ‘ஜே.இ.இ.’ நுழைவுத்தேர்வு வருகிற 18 முதல் 23-ந்தேதி வரையும் நாடு முழுவதும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.

ஆனால் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பலி எண்ணிக்கையும், புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் தினமும் உயர்ந்துகொண்டே செல்வதால் மத்திய-மாநில அரசுகளும், மருத்துவத்துறையும் செய்வதறியாமல் திகைத்து வருகின்றன.

கொரோனாவால் நாடு முழுவதும் பெரும் பீதி நிலவி வரும் நிலையில், மேற்படி நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. எனவே இது தொடர்பாக உறுதியான அறிவிப்பு வெளியிட வேண்டும் என அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகள் நடத்துவதற்கான சூழ்நிலை குறித்து ஆய்வு செய்வதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால் கூறுகையில், ‘கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு, நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத்தேர்வுகள் நடத்துவதற்கான சூழல் குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. தேசிய திறனாய்வு நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய இந்த குழுவினர் தங்கள் அறிக்கையை நாளைக்குள் (இன்று) அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்’ என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் மேற்படி நுழைவுத்தேர்வுகளுக்கான உறுதியான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story