விகாஸ் துபே உ.பி போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்: மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான்


விகாஸ் துபே உ.பி போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார்:  மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான்
x
தினத்தந்தி 9 July 2020 6:35 AM GMT (Updated: 9 July 2020 6:35 AM GMT)

மத்திய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி விகாஸ் துபே உத்தர பிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்று சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

போபால்,

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் பிக்ரு கிராமத்தை சேர்ந்தவன் பிரபல ரவுடி விகாஸ் துபே. கடந்த 3-ந் தேதி நள்ளிரவு அவனை போலீசார் கைது செய்ய சென்றனர். அப்போது, அவனும், அவனுடைய கூட்டாளிகளும் நடத்திய தாக்குதலில் 8 போலீசார் பலியானார்கள்.

போலீஸ் துப்பாக்கி சூட்டில் விகாஸ் துபே கூட்டாளிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவத்தை தொடர்ந்து, விகாஸ் துபேவுக்கு நெருக்கமான 5 பேர் கைது செய்யப்பட்டனர். 21 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உள்ளூர் போலீசார் 68 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். விகாஸ் துபேயை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

விகாஸ் துபேவை கைது செய்யும்வகையில் துப்பு கொடுப்பவருக்கு  ரூ.5 லட்சம்  பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  அரியானா மாநிலத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை பதிவு செய்ய விகாஸ் துபே முயற்சித்த சிசிடிவி காட்கள் வெளியானதால் அண்டை மாநிலங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இந்த நிலையில், இன்று  மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாநிலத்தில் உள்ள கோவில் சென்றுக்கு செல்ல முயன்ற போது, அங்கிருந்த பாதுகாவலர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.  உடனடியாக காவல்துறைக்கும் அங்கிருந்த பாதுகாவலர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, விரைந்து வந்த போலீசார் விகாஸ் துபேவை கைது செய்தனர்.

விகாஸ் துபே கைது செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், “ உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துடன் பேசினேன். உத்தர பிரதேச போலீசிடம் ரவுடி விகாஸ் துபே ஒப்படைக்கப்படுவார் “ என்றார். 

Next Story