மும்பை தாராவியில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா: உலக சுகாதார அமைப்பு பாராட்டு


மும்பை தாராவியில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா: உலக சுகாதார  அமைப்பு பாராட்டு
x
தினத்தந்தி 11 July 2020 1:28 AM GMT (Updated: 11 July 2020 1:28 AM GMT)

மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

ஜெனீவா,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி கொரோனா வைரஸ் நுழைந்து அசுர வேகத்தில் பரவியது. அங்கு கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவியது. 2.5 சதுர கி.மீட்டர் பரப்பில் 6.5 லட்சம் மக்கள்  வசிக்கும்  மக்கள் அடர்த்தி நிறைந்த தாராவியில் கொரோனா ஊடுருவியது பெரும் கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்பட்டது. எனினும் மராட்டிய அரசு, தாராவியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தி செயலாற்றியது.

இதன்பலனமாக, கடந்த சில வாரங்களாக  தாராவியில் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாவோர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. வெள்ளிக்கிழமை(நேற்று) 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  இந்த நிலையில், தாராவியில் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் ஆதனோம் கேப்ர்யேசுஸ்  இது குறித்து கூறுகையில், “ கடுமையான நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை இத்தாலி, ஸ்பெயின், தென்கொரியா மற்றும் தாராவி ஆகிய இடங்கள் நமக்கு காட்டியுள்ளன.  

உலக அளவில் கடந்த ஆறு வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இரு மடங்குக்கும் அதிகமாக உள்ளது. எனினும், வைரஸ் எவ்வளவு வேகமாக பரவினாலும், தீவிர நடவடிக்கைகள் மூலம் அதைக் கட்டுப்படுத்த முடியும் என்ற எடுத்துக்காட்டுகளும் நமக்கு கிடைத்துள்ளன” என்று தெரிவித்துள்ளார்.


Next Story