காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: இந்தியாவுக்குள் ஊடுருவ மேலும் 300 பேர் காத்திருப்பதாக தகவல்
காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர். இதுதவிர பாகிஸ்தான் எல்லையில் 300 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய காத்திருப்பதாக ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
ஸ்ரீநகர்,
கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைவதும், அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டுக்கொல்வதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்தநிலையில் வடக்குகாஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஹேண்ட்வாரா பகுதியில் உள்ள நங்கம் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்று அதிகாலை பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. உடனே சம்பவ இடத்திற்கு இந்திய ராணுவ வீரர்கள் விரைந்து சென்றனர். பின்னர் அவர்களை சரண் அடையுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர்கள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படை வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.
இந்த துப்பாக்கி சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் சிக்கின. மேலும் ரூ.1½ லட்சம் மதிப்புள்ள இந்திய, பாகிஸ்தான் நாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையே இந்தியாவுக்குள் நுழைவதற்காக பாகிஸ்தானில் 300 பயங்கரவாதிகள் தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து காஷ்மீரில் ராணுவ மேஜர் ஜெனரல் வீரேந்திர வாட்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு க ாஷ்மீர் பகுதியில் 250 முதல் 300 பயங்கரவாதிகள் திரண்டுள்ளனர். இவர்கள் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்து வருகிறார்கள். அதனை முறியடிக்க ராணுவ வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். பனிப்பொழிவு காலத்திற்கு முன்பாக அவர்கள் ஊடுருவ முயற்சிப்பார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்கு உதவியாக பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனை பயன்படுத்தி பயங்கரவாதிகள் ஊடுருவ முயலுவார்கள். இதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம்’ என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story