பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் அறிகுறிகள் தென்படுகின்றன: ரிசர்வ் வங்கி கவர்னர் தகவல்
ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் அறிகுறிகள் தென்படுவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
மும்பை,
உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடிவரும் கொரோனா மனித உயிர்களை பலி கொள்வதுடன், சர்வதேச பொருளாதாரத்தையும் சீரழித்து வருகிறது. இதற்கு இந்திய பொரு ளாதாரமும் தப்பவில்லை.
நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3 மாதங்களுக்கும் மேலாக அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கால் உற்பத்தித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் முடங்கி உள்ளன. இதனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து உள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கு நடவடிக்கைகளில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இது நாட்டின் பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தி வருவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
மும்பையில் நேற்று நடந்த ஸ்டேட் வங்கியின் 7-வது பொருளாதார மாநாட்டில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் இயல்புநிலைக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கி உள்ளன. எனவே நம்பிக்கை, நிதி நிலைத்தன்மையை பாதுகாத்தல், வளர்ச்சியை புதுப்பித்தல் போன்றவற்றை மீண்டும் ஏற்படுத்துவதும், வலுவாக மீண்டு வருவதும் இப்போதைய தேவை ஆகும்.
ஒரு நெருக்கடியில் இந்திய நிறுவனங்களும், துறைகளும் சிறப்பாக எதிர்வினையாற்றுகின்றன. எனினும் வினியோக சங்கிலியை முழுமையாக எப்போது மீண்டும் ஏற்படுத்தப்படும்?, தேவை விதிமுறைகள் சீரடைய எவ்வளவு காலம் ஆகும்?, சாத்தியமான வளர்ச்சியில் இந்த தொற்றுநோய் காலகட்டம் எத்தகைய நீடித்த விளைவுகளை இட்டுச்செல்லும் என்பதெல்லாம் இதுவரை தெரியவில்லை.
அரசால் ஏற்கனவே அறிவிக் கப்பட்ட இலக்கு மற்றும் விரிவான சீர்திருத்த நடவடிக்கைகள் வளர்ச்சிக்கு உதவும். கொரோனாவுக்கு பிந்தைய வேறுபட்ட உலக சூழலில், பொருளாதாரத்திற்குள் உற்பத்தி காரணிகளை மறு ஒதுக்கீடு செய்தல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கான புதுமையான வழிகள் சில மறுசீரமைப்பு மற்றும் புதிய வளர்ச்சி இயக்கிகளின் தோற்றத்திற்கு வழிவகுக்கும்.
நிதி ஸ்திரத்தன்மையைப் பாதுகாத்தல், வங்கி அமைப்பின் சிறந்த தன்மையைப் பேணுதல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளைத் தக்கவைத்தல் ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையைப் பராமரிக்க ரிசர்வ் வங்கி முயற்சிக்கிறது. கொரோனா கட்டுப்படுத்தலுக்குப் பிறகு, எதிர்சுழற்சி ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மிகவும் கவனமாகப் பின்பற்ற வேண்டும். ஒழுங்குமுறை தளர்வுகளை புதிய விதிமுறையாக நம்பாமல் நிதித்துறை இயல்பான செயல்பாட்டுக்கு திரும்ப வேண்டும்.
நிதி ஸ்திரத்தன்மை அபாயங் களின் மாறிவரும் பாதையை ரிசர்வ் வங்கி தொடர்ந்து மதிப்பீடு செய்து, அது பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அதன் சொந்த மேற்பார்வை கட்டமைப்பை மேம்படுத்துகிறது.
வங்கிகள் எப்போதும் விழிப்புடன் இருப்பதுடன், ஆளுகை, உத்தரவாத செயல்பாடுகள் மற்றும் இடர் கலாசாரம் தொடர்பாக அவற்றின் திறன்களை கணிசமாக மேம்படுத்த வேண்டும். மேலும் வங்கிகள் தங்கள் நிர்வாகத்தை மேம்படுத்தி, இடர் நிர்வாகத்தை கூர்மைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு சக்திகாந்த தாஸ் கூறினார்.
Related Tags :
Next Story