கொரோனா சிகிச்சைக்குபுதிய ஊசி மருந்து: மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு புதிய ஊசி மருந்து ஒன்றை அவசரகாலத்தில் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது
புதுடெல்லி,
கண்ணுக்கு தெரியாத எதிரியாக பார்க்கப்படுகிற கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு என இன்றுவரை எந்தவொரு மருந்தும் கண்டுபிடித்து சந்தைக்கு மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
கொரோனா வைரஸ் தொற்றை குணமாக்கும் மருந்துகளை கண்டுபிடிக்கவும், தடுப்பூசியை உருவாக்கவும் உலகளாவிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பிற நோய்களுக்காக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளை மருத்துவ ரீதியில் பரிசோதித்து கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், சொரியாசிஸ் என்ற சரும பிரச்சினைக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துகிற ‘இட்டோலிசுமாப்’ என்ற நோய் எதிர்ப்புச்சக்தி ஊசி மருந்தை, கொரோனா நோயாளிகளுக்கும் அவசர காலத்தில பயன்படுத்துவதற்கு இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் வி.ஜி.சோமானி நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளார்.
இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
இந்த ஊசி மருந்தை பெங்களூருவை சேர்ந்த பயோகான் மருந்து நிறுவனம் தயாரித்து, சந்தையிடுகிறது.
இந்த ஊசி மருந்தை மிதமான மற்றும் கடுமையான நாள்பட்ட சொரியாசிஸ் பிரச்சினைக்கு டாக்டர்கள் பரிந்துரைத்து அளித்து வந்தனர். ‘அல்சுமாப்’ என்ற வர்த்தக பெயரில் இந்த ஊசி மருந்து 2013-ம் ஆண்டு முதல் விற்பனையில் இருந்து வருகிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்படுகிற இந்த மருந்து, இப்போது கொரோனா வைரஸ் சிகிச்சையில் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த மருந்தின் 2-வது கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளை பயோகான் மருந்து நிறுவனம், இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் அளித்தது. இது குறித்து அந்த அமைப்பின் நிபுணர்கள் குழுவினர் விவாதித்தனர்.
விரிவான கலந்துரையாடல் மற்றும் குழுவின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டபின்னர், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மிதமானது முதல் கடுமையான வரையிலான சுவாச பிரச்சினை உள்ளவர்களுக்கு வழங்குவதற்காக சந்தைப்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.
இந்த மருந்தினை சம்பந்தப்பட்ட நோயாளியின் சம்மதம் பெற்றும், இடர்ப்பாடு நிர்வாக திட்டம் வகுத்தும், ஆஸ்பத்திரி அமைப்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த மருந்தானது தற்போது மருத்துவ சோதனையின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுகிற பிற மருந்துகளை விட விலை மலிவானது என்றும் தகவல்கள் கூறுகின்றன.
நாடு முழுவதும் 8 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதித்து, தற்போது 2 லட்சத்து 83 ஆயிரத்து 407 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிற சூழலில் இந்த ‘இட்டோலிசுமாப்’ ஊசி மருந்தை, கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story