கொரோனா தடுப்பு உயிர் காக்கும் மருந்துகள் கள்ள சந்தையில் விற்பனை; நாடாளுமன்ற குழு அதிர்ச்சி தகவல்
கொரோனா தடுப்பு உயிர் காக்கும் மருந்துகள் கள்ள சந்தையில் விற்கப்படுகின்றன என்று அரசிடம் நாடாளுமன்ற உள்விவகார குழு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகள் 10 லட்சம் என்ற எண்ணிக்கையை நோக்கி தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து, பொருளாதார தேக்கமும் ஏற்பட்டு உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகளை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் அரசு முழு அளவில் முயற்சி எடுத்து வருகிறது. மறுபுறம் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியும் நடந்து வருகிறது. எனினும், கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்த சூழலில் கொரோனா பாதிப்புகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள டெல்லியில் மத்திய உள்விவகார துறைக்கான நாடாளுமன்ற நிலை குழு கூட்டம் இன்று கூடியது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, சுகாதார அமைச்சக இணை செயலாளர் லவ் அகர்வால் மற்றும் பிற உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தலைமை தாங்கினார். கூட்டத்தில், கொரோனா சிகிச்சைக்கு விலையுயர்ந்த மருந்துகள் ஏன் பரிந்துரைக்கப்படுகின்றன? என குழு உறுப்பினர்கள் கட்சி வேற்றுமையின்றி கேள்வி எழுப்பினர்.
இதனால், கொரோனாவுக்கான மருந்துகள் கள்ள சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன என வருத்தம் தெரிவித்தனர். கள்ள சந்தையில் உயிர் காக்கும் மருந்துகளின் விற்பனையை நிறுத்த மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளோம் என குழுவிடம் அரசு தெரிவித்தது.
விலை குறைந்த, எளிதில் கிடைக்க கூடிய 3 மருந்துகளின் பெயரை குறிப்பிட்டு, விலையுயர்ந்த மருந்துகளுக்கு இணையாக திறன் கொண்ட இவற்றை ஏன் அரசு ஊக்கப்படுத்தவில்லை என்று அரசுக்கு உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். அவை மக்களுக்கு சென்றுசேர அரசு ஊக்கமளிக்க வேண்டும் என அவர்கள் கூட்டத்தில் கூறினர்.
Related Tags :
Next Story