ஸ்வப்னா வங்கி லாக்கரில் இருந்து ரூ.1 கோடி, ஒரு கிலோ தங்கம் பறிமுதல்; என்.ஐ.ஏ. அதிகாரிகள்
தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா வங்கி லாக்கரில் இருந்து ரூ.1 கோடி, ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளனர்.
கொச்சி,
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் சரக்கு விமானத்தில் வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தியது தெரிய வந்தது.
இதுதொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தூதரக முன்னாள் ஊழியர்களான சரித், ஸ்வப்னா சுரேஷ், அவருடைய உறவினரான சந்தீப் நாயர் ஆகியோரை என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு அமைப்பு) அதிகாரிகள் கைது செய்தனர். அதையடுத்து ஸ்வப்னா சுரேஷ் உள்பட 3 பேரும் என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதைத்தொடர்ந்து கோர்ட்டு அனுமதியுடன் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை காவலில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவரை துபாய் போலீசார் கடந்த 19ந்தேதி கைது செய்தனர். இதேபோன்று, ஸ்வப்னாவின் தோழியிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அது, ஸ்வப்னா கொடுத்து வைத்திருந்த பணம் என சுங்கத்துறை தெரிவித்திருந்தது.
ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரது காவல் முடிவடைந்த நிலையில், அவர்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். ஸ்வப்னாவின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.1 கோடி மற்றும் ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஸ்வப்னா, அதிகாரிகளின் விசாரணையில் மனஉளைச்சல் ஏற்பட்டது என்றும், தனது இரு குழந்தைகளையும் காண ஆவலுடன் இருக்கிறேன் என்றும் நீதிபதிகளிடம் கூறினார். இதன்பின்னர், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவருக்கும் ஆகஸ்டு 21ந்தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story