புதிய நோயாளிகள் அனுமதிக்கு எதிர்ப்பு; பெண் மருத்துவர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளிகள்


புதிய நோயாளிகள் அனுமதிக்கு எதிர்ப்பு; பெண் மருத்துவர் மீது எச்சில் துப்பிய கொரோனா நோயாளிகள்
x
தினத்தந்தி 7 Aug 2020 2:27 AM GMT (Updated: 7 Aug 2020 2:34 AM GMT)

திரிபுராவில் புதிய நோயாளிகளை வார்டில் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பெண் மருத்துவர் மீது கொரோனா நோயாளிகள் எச்சில் துப்பியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அகர்தலா,

நாடு முழுவதும் அதிதீவிரமுடன் பரவி வரும் கொரோனா பாதிப்பு திரிபுராவிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.  திரிபுரா மேற்கு மாவட்ட கொரோனா கண்காணிப்பு அதிகாரியான மருத்துவர் சங்கீதா சக்ரபோர்த்தி, பகத்சிங் இளைஞர் விடுதியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா நலமையத்திற்கு சென்றுள்ளார்.  அவருடன், புதிதாக பிறந்த குழந்தைகளுடன் சென்ற 5 பெண்களை அந்த மையத்தில் அனுமதிக்க முயன்றுள்ளார்.

ஆனால், அங்கிருந்த கொரோனா நோயாளிகள் அவர்களை தடுத்ததுடன், புதிய நோயாளிகள் யாரையும் சேர்க்க கூடாது என கூறினர்.  மையத்தில் முழு அளவில் நோயாளிகள் நிரம்பியுள்ளனர் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அவர்களிடம் சமரசம் பேச மையத்தில் இருந்த டாக்டர்கள் முயற்சித்தனர்.  ஆனால், தகாத வார்த்தைகளால் பேசியதுடன், பெண் மருத்துவர் சக்ரபோர்த்தி மீது கொரோனா நோயாளிகள் எச்சில் துப்பியுள்ளனர்.  அவர் மீது கொரோனா வைரசை பரப்பி விட்டு விடுவோம் என்று அச்சுறுத்தலும் விடுத்தனர்.

இதனை தொடர்ந்து கொரோனா நோயாளிகள் 4 பேர் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதன்பின்பு மாஜிஸ்திரேட் நீதிபதி சஞ்சன் லால் திரிபுரா, குற்றச்சாட்டு கூறப்பட்டவர்களுக்கு தலா ரூ.30 ஆயிரம் பிணை தொகையில் ஜாமீன் வழங்கினார்.  இதற்கு நிகரான மற்றொரு தொகையை வரும் 10ந்தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடனும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

எனினும் இதனை ஐகோர்ட்டு நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர்.  இதனை தொடர்ந்து கொரோனா நோயாளிகள் 4 பேரும் போலீசில் சரணடைந்தனர்.

Next Story