மாணவர்களின் திறனை மேம்படுத்தவே புதிய கல்வி கொள்கை - பிரதமர் மோடி பேச்சு


மாணவர்களின் திறனை மேம்படுத்தவே புதிய கல்வி கொள்கை - பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 7 Aug 2020 11:15 PM GMT (Updated: 7 Aug 2020 10:14 PM GMT)

மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலேயே புதிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி, 

இந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய மந்திரிசபை சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும், உயர் கல்வியில் பெரிய அளவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் இந்த புதிய கல்வி கொள்கையில் வகை செய்யப்பட்டு உள்ளது.

இந்த புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் உள்ளது. தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே நீடிக்கும் என்றும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என்றும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் பல்கலைக்கழக மானிய குழுவின் சார்பில் புதிய கல்வி கொள்கை பற்றிய மாநாடு நேற்று டெல்லியில் நடைபெற்றது. ‘தேசிய கல்வி கொள்கையின் கீழ் உயர்கல்வியில் சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

புதிய தேசிய கல்வி கொள்கை தொடர்பாக கடந்த 4 ஆண்டுகளாக பலமுறை விரிவாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கானவர்களிடம் இருந்து யோசனைகள் பெறப்பட்டன. அதன்பிறகே புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த புதிய கல்வி கொள்கை யாருக்கும் சாதகமானதாகவோ அல்லது பாதகமானதாகவோ இல்லை. இதில் பல்வேறு சீர்திருத்தங்கள் உள்ளன. முன்னேறிச் செல்வதற்கு சீர்திருத்தம் ஒன்றே வழி.

திறனை மேம்படுத்தும்

இந்த கல்வி கொள்கை 21-ம் நூற்றாண்டில் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான அடித்தளமாக அமையும். இதுவரை இருந்த நமது கல்வி முறை எதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்பது பற்றி முக்கியத்துவம் அளித்தது. புதிய கல்வி கொள்கை எப்படி சிந்திக்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.

21-ம் நூற்றாண்டுக்கு மாணவர்களை தயார்படுத்துவதற்கு தேவையான அறிவையும், திறமைகளையும் புதிய கல்வி கொள்கை அவர்களுக்கு வழங்கும். அவர்களுடைய கற்பனை திறனை மேம்படுத்தும். பாடங்களை புரிந்து படிப்பது, படிப்பதை நடைமுறைப்படுத்துவது, புதுமையாக சிந்தித்தல் ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்திய மாணவர்களின் திறனை உலகத்தரத்துக்கு மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.

மேலும் இது தாய் மொழி கல்வியை ஊக்குவிக்கும். தாய் மொழியில் படிப்பதன் மூலம் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதனால்தான் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்க புதிய கல்விக் கொள்கையில் வகை செய்யப்பட்டு உள்ளது.

தரமான கல்வியை வழங்குவதற்காக கல்வி நிறுவனங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும். வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள், வளாகங்களை இந்தியாவில் அமைக்க புதிய கல்வி கொள்கை வகை செய்கிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ரமேஷ் பொக்ரியால், அந்த துறையின் ராஜாங்க மந்திரி சஞ்சய் தோத்ரே மற்றும் புதிய தேசிய கல்வி கொள்கை வரைவு குழுவின் தலைவர், உறுப்பினர்கள், கல்வியாளர்கள் மாநாட்டில் பங்ககேற்றனர்.

Next Story