மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு


மூணாறு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்வு
x
தினத்தந்தி 12 Aug 2020 10:15 PM GMT (Updated: 12 Aug 2020 8:50 PM GMT)

மூணாறு அருகே, நிலச்சரிவில் சிக்கி பலியான சிறுவன் உள்பட 3 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதன் மூலம் பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

மூணாறு, 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த 7-ந்தேதியன்று அதிகாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வசித்து வந்த 20 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளின் மேல் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. தண்ணீரோடு அடித்து வரப்பட்ட மணல், வீடுகளை மூடியது. அங்கு வசித்த 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்து விட்டனர்.

இதில் 3 பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மீதமுள்ள 75 பேர் மண்ணுக்குள் சிக்கி கொண்டனர். தப்பி வந்த 3 பேர் கொடுத்த தகவலின் பேரில் மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்பட 600-க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலச்சரிவு ஏற்பட்ட 7-ந்தேதி மட்டும் 13 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மேலும் 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

கடந்த 7-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 52 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் 6-ம் நாளான நேற்றும் மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. நவீன எந்திரங்கள் மூலம் நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மண்ணுக்குள் புதைந்து கிடந்த பாறைகள் தகர்த்து அகற்றப்பட்டன.

நேற்று நடந்த மீட்பு பணியின்போது, வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான சிறுவன் உள்பட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால் மண்ணுக்குள்ளேயே 5 நாட்களுக்கும் மேல் இருந்ததால் அவர்களின் முகம், உடல்கள் சிதைந்த நிலையில் இருந்தன. இதன் காரணமாக அவர்களை அடையாளம் காணமுடியவில்லை.

தேயிலை தோட்ட உரிமையாளர்களின் உதவியுடன் அவர்கள் யார்? என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 3 உடல்கள் மீட்கப்பட்டதன் மூலம், நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்தது. 7-வது நாளாக இன்று (வியாழக்கிழமை) மீட்பு பணி தொடர்ந்து நடைபெற உள்ளது.

Next Story